#BREAKING: தமிழ்நாட்டின் மேலும் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு..!

தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு இந்திய அரசாங்கம் புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரிக்கிறது.அந்த வகையில் தற்போது அதிகமான பொருட்களுக்கு (55) புவிசார் குறியீடுகளை பெற்றிருக்கும் மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் விளையும் மட்டி வாழைப்பழம், திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் தயாராகும் செடிபுட்டா சேலை, திருவண்ணாமலை மாவட்ட ஜடேரி கிராமத்தில் தயாராகும் நாமக்கட்டி ஆகிய 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
புவிசார் குறியீடுக்கான அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி இன்று தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் இருந்து மேலும் 3 பொருட்களுக்கு புவிசார்குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புவிசார் குறியீடு பெற்ற தமிழ்நாட்டு பொருட்களின் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது.
மேலும் தேசிய அளவில் அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.இந்நிலையில் மேலும் 15 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறவும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே மதுரை மல்லி ,திண்டுக்கல் பூட்டு ,காஞ்சிபுரம் பட்டு ,ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா ,சேலம் சுங்குடி சேலை ,பழனி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளன . அதேபோல மணப்பாறை முறுக்கு , மார்த்தாண்டம் தேன், நகமம் காட்டன், மயிலாடி கற்சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம் , ஊட்டி வர்க்கி, கம்பம் பன்னீர் திராட்சை , ஆத்தூர் வெற்றிலை, சோழவந்தான் வெற்றிலை உள்ளிட்ட 11 பொருட்களுக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டிருந்தது.