பூட்டியிருந்த வீட்டை உடைத்து 13 சவரன் நகை - வெள்ளி பொருள்கள் கொள்ளை !

அரியலூரில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 13 சவரன் நகைகள் மற்றும் வெள்ளி பொருள்களை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூரில் உள்ள ஜெயலலிதா நகரில் வசிப்பவர் கிருஷ்ணன். இவர் சாத்தமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலையில் உதவி மேனேஜராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது மகளின் விட்டிற்கு குடும்பத்தினருடன் சென்ற கிருஷ்ணன் மீண்டு தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பிரோவில் இருந்த 13 சவரன் நகைகள் மற்றும் பூஜைஅறையில் இருந்த வெள்ளி பொருள்கள் திருட்டு போனது தெரியவந்தது.
இதனையடுத்து, கிருஷ்ணன் அளித்த புகாரில் அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மோப்பநாய் மற்றும் தடயஅறிவியல் நிபுணர்கள் நிகழ்விடத்திற்கு சென்று கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அரியலூரில் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.