1. Home
  2. தமிழ்நாடு

பெற்றோர்களின் சிறு கவனக்குறைவால் தூளியில் விளையாடிய சிறுவன் சேலை இறுக்கி உயிரிழப்பு..!

Q

திருவண்ணாமலையை சேர்ந்தவர் பாரதிதாசன் (34 வயது). இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகன் சஸ்டிதரன் (13 வயது) 8-ம் வகுப்பு படித்து வந்தான். கணவன், மனைவி இருவரும் கட்டிட கட்டுமான வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் வழக்கம் போல் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர்.
சஸ்டிதரன் உடல் நலம் சரியில்லாததால் கடந்த 3 நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் சேலையால் தொட்டில் (தூளி) கட்டி வைக்கப்பட்டு இருந்துள்ளது. அந்த தொட்டிலில் சஸ்டிதரன் விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சேலை கழுத்தை சுற்றி இறுகியதால் சிறுவன் தூளியில் தொங்கியபடி இருந்துள்ளான். மாலையில் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய பாரதிதாசனின் மகள், தம்பி தொட்டிலில் கழுத்து தொங்கியபடி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அருகில் இருந்த தனது உறவினர்களிடம் சென்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து பாரதிதாசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அங்கு வந்த அவர்கள் தொட்டிலில் தொங்கியபடி இருந்த சஸ்டிதரனை மீட்டு ஆட்டோ மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
தூளியில் விளையாடியபோது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like