முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்படும் - முதல்வர் முக ஸ்டாலின்..!
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 179 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூ.14.42 கோடி நூலுரிமைத் தொகை அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வரிசையில், சமூக நீதிக்காக அரும்பாடுபட்ட தலைவரும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவரும், தமிழுக்கு செம்மொழி தகுதியினைப் பெற்றுத் தந்தவரும், தனது எழுத்து மற்றும் பேச்சுக்களின் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்தவருமான தலைவர் கருணாநிதியின் அனைத்து நூல்களும் தமிழ்நாடு அரசு சார்பில் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை வழங்கியுள்ளார்.
80 ஆண்டு காலம் பொது வாழ்வு, 5 முறை முதல்-அமைச்சராக மக்கள் பணி மட்டுமல்லாமல் தலைவர் கருணாநிதி 75 திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை வசனங்களையும், 15 நாவல்களையும், 20 நாடகங்களையும், 15 சிறுகதைகளையும், 210 கவிதைகளையும் படைத்துள்ளார். இவற்றைத் தவிர, தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களையும் தீட்டியுள்ளார். மேலும், தலைவர் கருணாநிதி தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற காலங்களில் 108 தமிழறிஞர்களின் புத்தகங்களை நாட்டுடைமை செய்து, அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகையாக ரூ.7 கோடியே 76 லட்சம் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார்.
தலைவர் கருணாநிதியின் அனைத்து நூல்களும் நாட்டுடமையாக்கம் செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் தலைவர் கருணாநிதியின் செழுமையான நூல்களை ஊன்றிப் படிக்க அரியதொரு வாய்ப்பாக அமையும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.