மும்பை ஐகோர்ட் : கருமுட்டை தானம் கொடுத்தவர் குழந்தைக்கு உரிமை கோர முடியாது!
மும்பையைச் சேர்ந்த ஒரு பெண், கருத்தரிப்பதில் சிரமம் இருந்ததால், தன் தங்கையிடமிருந்து கரு முட்டைகளைத் தானம் பெற்றார். அதன் மூலம் இரட்டை பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். குழந்தைகள் வளர்ந்து வந்த நிலையில், தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மனைவிக்குத் தெரியாமல், இரு குழந்தைகளையும் எடுத்துக் கொண்டு கணவர் ஜார்க்கண்ட் மாநிலம் சென்று விட்டார்.
இந்தச் சூழ்நிலையில், கரு முட்டை தானம் செய்த பெண்ணின் தங்கையும், தன் அக்கா கணவருடன் சேர்ந்து கொண்டார். தான் வழங்கிய கரு முட்டையிலிருந்து பிறந்த குழந்தைகளுக்குத் தானே சட்டபூர்வமான தாய் என்று உரிமை கோரினார் தங்கை.இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், கணவர், கொளுந்தியாள் ஆகியோரின் வாதத்தை ஏற்றது; குழந்தைகளைப் பெற்றெடுத்த தாயின் வாதத்தை நிராகரித்தது; குழந்தைகளைப் பார்க்கும் உரிமை, பெற்ற தாய்க்கு இல்லை என்று கூறி விட்டது.
கருமுட்டை தானம்
அதிர்ச்சியடைந்த அக்கா (குழந்தைகளைப் பெற்ற தாய்), தன் கணவருக்கு எதிராகவும், தங்கைக்கு எதிராகவும் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மிலிந்த் ஜாதவ்,”தங்கை கருமுட்டை தானம் செய்தவர் என்றாலும் கூட அவர் குழந்தைகளின் தாய் என்று உரிமை கோர முடியாது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிகாட்டுதல் படி, விந்தணு தானம் அல்லது கருமுட்டை தானம் செய்தவர், நன்கொடையாளர் தானே தவிர, அதற்கு மேல் எந்த அந்தஸ்தும் அவர்களுக்குக் கிடையாது” என உத்தரவிட்டார்.