கோர்ட்டில் குண்டு வெடிப்பு.. 3 பேர் பலி.. 20 பேர் படுகாயம்: பஞ்சாப்பில் பரபரப்பு..!
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர். சுமார் 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் குடும்பம் மற்றும் குற்றவியல் போன்ற வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நீதிமன்றத்தின் 3வது தளத்திலுள்ள கழிவறைக்குள் திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டிருக்கிறது.
இதையடுத்து அது குண்டுவெடிப்பு என தெரியவந்துள்ளது. இதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். நீதிமன்ற வளாகத்தில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில் சுமார் 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல் துறையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறை அதிகாரிகள் அங்கு விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.