பிரபல பாலிவுட் நடிகை முதன் முறையாக தேர்தலில் போட்டி..!
நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பாஜக அடுத்தடுத்து தனது வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. இதுவரை 4 கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்ட நிலையில், தற்போது 5-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் 111 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
பாஜகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் முதன்முறையாக இந்த தேர்தலில் களம் இறக்கப்பட்டுள்ளார். அவரது சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மாண்டி தொகுதியில் கங்கனா ரனாவத் போட்டியிடவுள்ளார். அதேபோல், தூர்தர்ஷனில் வெளியான ராமாயணம் நாடகத்தில் ராமர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அருண் கோவில் உத்தரபிரதேச மாநிலம் மீரட் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, மேனகா காந்திக்கு உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரது மகன் வருண் காந்திக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த முறை வருண் காந்தி போட்டியிட்ட பில்பிட் தொகுதி இந்த முறை ஜிதின் பிரசாதாவுக்கு தரப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரர் மனைவி சீதா சோரனுக்கு தும்பா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவில் அண்மையில் இணைந்த பிரபல தொழிலதிபர் நவீன் ஜிண்டாலுக்கு ஹரியாணாவின் குருஷேத்ரா தொகுதியும், கர்நாடகாவின் ஜெகதிஷ் ஷெட்டருக்கு பெல்காம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.