இன்று பட்டமளிப்பு விழாவிற்கு செல்ல உள்ள ஆளுநருக்கு கருப்பு கொடி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு..!

சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பரிந்துரைத்த நிலையில், அதனை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுத்துவிட்டார். இதற்கு ஆளும் திமுக அரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், இன்று பட்டமளிப்பு விழாவிற்கு செல்ல உள்ள ஆளுநருக்கு எதிரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
மதுரையில் இருந்து காமராஜர் பல்கலைக்கழகம் செல்லும் வழியில் உள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் தியாகி சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க மறுத்த ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதன் காரணமாக அங்கு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க மதுரை மாநகர போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தொடர்பாக தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழகம் பரிந்துரைத்த பிறகும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காததைக் கண்டித்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
102 வயதாகும் தியாகி சங்கரைய்ய சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டு 9 ஆண்டு காலம் சிறையில் இருந்தவர், இந்த தள்ளாத வயதிலும் மக்களுக்காக குரல் கொடுத்து வருவதோடு, பொதுவுடைமை கொள்ளையிலும் ஈடுபாடு கொண்டவர். அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க, மதுரை காமராஜர் பல்கலைக்கழக சிண்டிகேட் மற்றும் செனட் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் அதில் கையெழுத்திட தமிழக ஆளுநர் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.