1. Home
  2. தமிழ்நாடு

பாஜகவின் இலக்கு 2026 அல்ல, 2029 மக்களவைத் தேர்தல் தான் - நயினார் நாகேந்திரன்..!

1

 சென்னை காட்டாங்கொளத்தூரில் பாஜக பூத் கமிட்டி பயிலரங்கம் நடைபெற்றது. அதில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் பாஜகவின் முதல் மாநாடு நடைபெறும் இடம் குறித்தும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சட்டமன்றத் தேர்தலையோட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி நெல்லையில் பாஜகவின் மாநில மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன் , “திமுக பெரிய வலிமையான கூட்டணியை வைத்துள்ளதாக சில கருத்துக்களைக் சொன்னார்கள். அதைப் பற்றி நீங்கள் கவலையே பட வேண்டாம். ஏனெனில் 2026ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் உறுதியாக நடக்கும். அதற்கான வியூகங்களை உள் துறை அமைச்சர் அமித்ஷா பார்த்துக்கொள்வார்.

அதேபோல திமுக எப்போதும் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்ததே இல்லை. 2006ஆம் ஆண்டு மைனாரிட்டி அரசை திமுக அமைத்தது. மக்கள் சக்தியுடன் திமுக என்றைக்கும் ஆட்சிக்கு வந்ததே இல்லை. ஆகவே, கூட்டணி குறித்து கவலைப்பட வேண்டாம். குறிப்பாக 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் வாங்கிய ஓட்டுகளை கூட்டினால் 24 லட்சம் ஓட்டுகள்தான் வித்தியாசம் இருந்தது.

2026ஆம் ஆண்டு நமக்கு முக்கியமல்ல. 2029 மக்களவைத் தேர்தல் தான் நம்முடைய இலக்கு. 2026ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்போது 4 சீட் இருப்பது வரும் தேர்தலில் 40 அல்லது 50 ஆக உயருமா என்பதெல்லாம் வேறு விஷயம். நமது நோக்கம் 2029 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில இருந்து எத்தனை மக்களவை உறுப்பினர்கள் போகிறார்கள் என்பதுதான் முக்கியம். 2029ஆம் ஆண்டு பாஜகவின் வலிமை என்ன என்பது மற்றவர்களுக்குப் புரியும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக அண்ணாமலை 2026தான் பாஜகவின் இலக்கு என்று பேசி வந்தார். அதாவது 2024 மக்களவைத் தேர்தல் போலவே பாஜக தலைமையில் தனி அணி அமைத்து சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது அவருடைய எண்ணமாக இருந்தது. ஆனால், அதிமுக - பாஜக கூட்டணி அமைந்த நிலையில், அண்ணாமலையும் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டார். இந்த நிலையில் 2029தான் நமது இலக்கு என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளது முக்கியமானதாக மாறியுள்ளது.

Trending News

Latest News

You May Like