1. Home
  2. தமிழ்நாடு

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பது தான் பா.ஜனதாவின் அரசியல் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

1

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் இளைஞர் அணியினருக்கு சேலம் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது., சேலத்தில் டிசம்பர் 17-ம் தேதி இளைஞர் அணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு இளைஞர்களை மன ரீதியாக தயார்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் சென்று அவர்களை சந்திக்கலாம் என்ற எண்ணத்தில் தொடங்கியது தான் இந்த செயல்வீரர்கள் கூட்டம்.

முதல் கூட்டம் ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதி, காஞ்சிபுரத்தில் நடந்தது. அதனை தொடர்ந்து தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரியில் மிக சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த கூட்டங்களில் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முட்டுக்கட்டையாக உள்ள பாசிச பா.ஜ.க. அரசையும் அதற்கு உடந்தையாக இருந்து தமிழர்களின் நலன்களை விட்டு கொடுத்த அ.தி.மு.க.வையும் விமர்சித்து பேசி வருகிறேன்.

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பது தான் பா.ஜனதாவின் அரசியல். அமைதியான தெளிந்த நீரோடை போல் உள்ள தமிழ்நாட்டில் அவர்களால் அரசியல் செய்ய முடியவில்லை. அவதூறு பேச்சு, சாதி, மத துவேசம் போன்ற அழுக்குகளை கொட்டி குளிப்பாட்டி அரசியல் செய்ய நினைக்கிறது. பல சமயங்களில் அழுக்கை கொட்டும் போதே பிடிபட்டு அம்பலப்பட்டு வருகிறது. சி.சி.டி.வி. காட்சிகளுடன் கையும், களவுமாக பிடிப்பட்டு முகமுடி கிழிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இன்ஸ்டன்ட் அரசியலில் பா.ஜ.க. ஈடுபடுகிறது. இன்று அவதூறு பரப்பி, நாளையே கோட்டைக்குள் சென்று விட வேண்டும் என்ற வெறி மட்டுமே அவர்களிடம் உள்ளது. பொறுமை இல்லை. இந்த போலி அரசியல் பயணத்தில் அங்கங்கு இருக்கும் சமூக விரோதிகளை எல்லாம் அள்ளிப் போட்டுக் கொண்டு அரசியல் என்ற பெயரில் மக்கள் விரோத செயலில் ஈடுபட்டு வருகிறது. தலைமை கழகம் தொடங்கி கடைகோடி கிளைக்கழகம் வரை நம் இயக்கம் மிகப்பெரிய கட்டமைப்பு கொண்டது. இந்த கட்டமைப்பினால் தான் பல இடர்களுக்கு இடையிலும் கட்சி தொய்வின்றி தன்வெற்றி நடைபயணத்தை தொடர்கிறது.

இதே கட்டமைப்பை நாம் அடுத்த தலைமுறைக்கு கடத்தவும், உங்களின் தேவைகளை நிறைவேற்றவும் கழகம் இருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்தவும் தான் இந்த மாநாடு. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெறும் மாநாட்டில் நம் பலத்தை எதிர்க்கட்சிகளுக்கு உணர்த்தவும், நமக்கு துணையாக கழகம் இருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்தவும் இளைஞர்கள் அனைவரும் சேலத்தில் கூட வேண்டியது அவசியம். இவ்வாறு கூறி உள்ளார்.

Trending News

Latest News

You May Like