1. Home
  2. தமிழ்நாடு

மாநில அதிகாரங்களைப் பறிக்க பாஜக முயற்சி! பரபரப்பு குற்றச்சாட்டு!

மாநில அதிகாரங்களைப் பறிக்க பாஜக முயற்சி! பரபரப்பு குற்றச்சாட்டு!


நாட்டில் உள்ள பல்வேறு மொழி, பண்பாடு கொண்ட தேசிய இனங்களின் தனித்துவ அடையாளத்தைச் சிதைத்து, வடமொழி, இந்தி ஆதிக்கத்தைத் திணித்து, மாநில அதிகாரங்களைப் பறிக்க பாஜக முயற்சி செய்து வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், நவம்பர் 1-ம் நாள் தமிழக மக்கள் கொண்டாடி மகிழ வேண்டிய ‘தமிழ்நாடு நன் நாள்’. கடந்த 1956 -ம் ஆண்டு நவம்பர் முதல் நாள் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழ் பேசும் மக்களைக் கொண்ட தமிழர் தாயகமாக சென்னை மாகாணம் மறு சீரமைப்புச் செய்யப்பட்டது.

நாடு விடுதலை பெற்றதற்குப் பின்னர் மொழிவாரி மாநில சீரமைப்புப் பற்றி ஆய்வதற்காக 1948 ஜூன் 17 இல் ‘தார்’ ஆணையம், அமைக்கப்பட்டது. மொழிவாரி மாநில சீரமைப்பு தற்போது அவசியமில்லை என அந்த ஆணையம் பரிந்துரை செய்தது.

இந்தப் பரிந்துரை அறிக்கையை காங்கிரஸ் கட்சி சார்பில் வல்லபாய் படேல், பண்டித நேரு, பட்டாபி சீதாராமையா ஆகியோரைக் கொண்ட ‘ஜே.வி.பி’ குழு ஆய்வு செய்து, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதைக் கிடப்பில் போட்டுவிட்டது.

மாநில அதிகாரங்களைப் பறிக்க பாஜக முயற்சி! பரபரப்பு குற்றச்சாட்டு!

ஆந்திர மாநிலம் மொழி அடிப்படையில் பிரிக்கப்படும் வரை உண்ணா நோன்பு மேற்கொள்வேன் என்று பொட்டி ஸ்ரீராமுலு அறிவித்து, 1952 அக்டோபரில் போராட்டத்தைத் தொடங்கி, 58 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து, 1952 டிசம்பர் 16 இல் உயிர் துறந்தார். இதனால் பற்றி எரிந்த மொழிக்கனல் பிரதமர் பண்டித நேருவை உலுக்கியதால், ஆந்திரா எனும் தெலுங்கு மாநிலம் கடந்த 1953-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேதி மலர்ந்தது.

ஆந்திராவைப் போலவே பிற தேசிய இனங்களும் மொழிவாரி மாநிலங்களாக உருவாகக் குரல் எழுப்பியவுடன், பசல் அலி தலைமையில் மாநில சீரமைப்புக் குழுவை இந்திய அரசு அமைத்தது. இந்த குழு 1955, செப்டம்பரில் தனது பரிந்துரையை வழங்கியது. அதன் அடிப்படையில்தான் 1956 நவம்பர் 1-ம் நாள் முதன் முதலில் 14 மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.

சென்னை மாகாணத்தில் இடம் பெற்றிருந்த தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அந்தந்த மொழி மாநிலங்களுடன் இணைக்கப்பட்டன. சென்னை மாகாணம் தமிழ்மொழி பேசும் மக்கள் கொண்டதாக சீரமைக்கப்பட்டது.

மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போதே தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டது. தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளான சித்தூர், திருப்பதி ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது.

கேரளாவிடம் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமங்காடு மற்றும் பாலக்காடு போன்ற பகுதிகளையும், கர்நாடகாவிடம் ‘வெங்காலூர்’ என்னும் பெங்களூரு, கோலார் தங்கவயல் போன்றவற்றையும் இழந்தோம்.

தமிழர்களின் பகுதிகளை அண்டை மாநிலங்களோடு மத்திய அரசு இணைத்துவிட்டதால், நதிநீர் சிக்கல்கள் அரைநூற்றாண்டு காலத்திற்கும் மேலாகத் தொடருகின்றன.

தென்மாநிலங்களை இணைத்து தட்சிணப் பிரதேசம் அமைப்பதை எதிர்த்துக் குரல் எழுப்பியவர் தந்தை பெரியார். பெருந்தலைவர் காமராஜர் அவர்களும் பெரியாரின் கோரிக்கையை ஆதரித்தார்.

மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது தெற்கு எல்லையில் குமரியும், வடக்கு எல்லையில் திருத்தணியும் தமிழகத்தோடு இணைப்பதற்குப் போராடிய, மார்ஷல் நேசமணி, சிலம்புச் செல்வர் ம.பொ.சி., சென்னை மாகாண பெயரை மாற்றி, ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்களை தமிழ்நாடு நாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம்.

1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதே ஆர்.எஸ்.எஸ். தலைவர் குருஜி கோல்வால்கர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். இந்து ராஷ்டிரா எனும் ஒற்றை தேசமாக இந்த நாடு உருவாக வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்கள் தொடக்கம் முதலே வலியுறுத்தி வந்தனர்.

மத்தியில் பா.ஜ.க. அரசு பெரும்பான்மை பலத்துடன் அமைந்தவுடன் இந்தியாவை "ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே பண்பாடு" என்று ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதற்கு முனைந்துள்ளது.

பல்வேறு மொழி, பண்பாடு கொண்ட தேசிய இனங்களின் தனித்துவ அடையாளத்தைச் சிதைத்து, வடமொழி, இந்தி ஆதிக்கத்தைத் திணித்து, மாநில அதிகாரங்களைப் பறிக்க பாஜக முயற்சி செய்து வருகிறது.

தமிழ்நாட்டின் மரபு, மொழி, இனம் மற்றும் மாநில உரிமை ஆகியவற்றை நிலைநாட்டுவோம் என இந்த நள்நாளில் உறுதியேற்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like