பேரணி செல்ல முயன்ற குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.,வினர் கைது..!
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று (ஜன.,03) மதுரை செல்லாத்தம்மன் கோவிலில் இருந்து சென்னை வரை பா.ஜ., சார்பில் நீதி கேட்பு பேரணி நடத்தப்படும் அறிவிக்கப்பட்டிருந்தது.
பா.ஜ.,வின் நீதி கேட்பு பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால் மதுரையில் இருந்து பா.ஜ., பேரணி உறுதியாக துவங்கும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்தார். இந்நிலையில், இன்று (ஜன.,03) பா.ஜ., மாநில மகளிரணி தலைவர் உமாரதி தலைமையில், கட்சியினர் ஏராளமானோர் திரண்டனர். தொண்டர்கள் மத்தியில் நடிகை குஷ்பூ பேசினார். பின்னர் போலீசார் தடையை மீறி பேரணி நடத்த முயன்ற, குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது பா.ஜ.,வினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. குஷ்பூ கூறுகையில், ''பேரணிக்கு அனுமதி தருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. பேரணிக்கு அனுமதி தரமாட்டார்கள் என்பது தெரியும்,'' என்றார்.