இன்று மட்டுமில்லை என்றும் பாஜக திமுகவுடன் கூட்டணி வைக்காது : அண்ணாமலை பரபர பேச்சு!
சென்னை ராயப்பேட்டையில் தமிழகத்தை மீட்போம், தளராது உழைப்போம் என்ற பெயரில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “பாஜகவுக்கு இரண்டு எதிரிகள் தான். திமுக என்பது ஒரு தீய சக்தி. 50 ஆண்டு காலமாக தமிழக மக்கள் நன்றாக உணர்ந்துள்ள தீய சக்தி. மற்றொன்று அதிமுக. முன்பு இருந்த அதிமுக வேறு. தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக டெண்டர் கட்சி போல ஆகிவிட்டது. அதிகமாக விலைக்கு டெண்டர் எடுத்து எடப்பாடி பழனிசாமி கட்சியை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்றால் 2026 சட்டமன்றத் தேர்தலை விட வேறு வாய்ப்பே இல்லை. திராவிட அரசியலை அடியோடு ஒழிக்க, 2026 தேர்தல்தான் சரியான தருணம். கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவில் நாங்கள் கலந்துகொண்டதால் ஒரு தொண்டர் கூட்டத்திற்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்.
கருணாநிதியின் அரசியல், தனிமனித வாழ்க்கையை பிரித்துப் பார்க்கும் பக்குவம் பாஜகவுக்கு உள்ளது. 100 ஆண்டுகளை கடந்த, 5 முறை முதல்வராக இருந்த ஒரு மனிதருக்கு நாம் மரியாதை செலுத்தியுள்ளோம். திமுகவுடன் எப்போதும் பாஜக கூட்டணி வைக்காது. தொண்டர்களை கேட்டுத்தான் தேசிய கட்சியான பாஜக முடிவு எடுக்கும். 2024 தேர்தலில், ஒரு மாற்று சக்தியாக தமிழகத்தில் பாஜக நிரூபித்துள்ளது” என்றும் தெரிவித்தார்.