திரிபுரா பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜ.க. 97 சதவீத இடங்களில் வெற்றி..!
திரிபுரா மாநிலத்தில் கடந்த 8-ந்தேதி மூன்று அடுக்கு கிராம பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், அந்த மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. 97 சதவீத இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கிராம பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து சமிதிக்கள் மற்றும் ஜில்லா பரிஷத்துகளில் உள்ள 71 சதவீத இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகினர். இதையடுத்து, மீதம் உள்ள 29 சதவீத இடங்களுக்கான வாக்குப்பதிவு கடந்த 8-ந்தேதி நடத்தப்பட்ட நிலையில், இதன் முடிவுகள் நேற்று வெளியாகின.
இதில் 584 கிராம பஞ்சாயத்துகள், 34 பஞ்சாயத்து சமிதிக்கள் மற்றும் 8 ஜில்லா பரிஷத்துகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. 8 ஜில்லா பரிஷத்துகளில் உள்ள 96 இடங்களில் பா.ஜ.க. 93 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாயத்து சமிதிக்களை பொறுத்தவரை வாக்குப்பதிவு நடைபெற்ற 188 இடங்களில் பா.ஜ.க. 173 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
அதே போல் கிராம பஞ்சாயத்துகளில் வாக்குப்பதிவு நடைபெற்ற 1,819 இடங்களில் பா.ஜ.க. 1,476 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 148 இடங்களிலும், காங்கிரஸ் 151 இடங்களிலும், திப்ரா மோத்தா 24 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க.வின் சராசரி வெற்றி விகிதம் 97 சதவீதமாக உள்ளது எனத் திரிபுரா மாநில பா.ஜ.க. தலைவர் ரஜீப் பட்டாச்சார்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்-மந்திரி மானிக் சாகா கூறுகையில், “பிரதமர் மோடியின் மீதும், அவரது வளர்ச்சி திட்டங்கள்மீதும் மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தற்போது பா.ஜ.க. 97 சதவீத இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்காலத்தில் 100 சதவீத இடங்களில் வெற்றி பெற உழைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.