1. Home
  2. தமிழ்நாடு

பா.ஜ.க.வால் ஒருபோதும் இந்த நடைமுறையை ஒருபோதும் செயல்படுத்த முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு..!

1

நாட்டில் மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, தனது அறிக்கையை கடந்த மார்ச் மாதம் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் சமர்பித்தது.

18,000-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், மக்களவை மற்றும் பேரவைகளுக்கு ஒரே நேரத்திலும், அடுத்த 100 நாள்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் என இரு கட்டங்களாக தோ்தலை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் குழு அளித்த பரிந்துரைகள், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மன்றங்களில் விவாதிக்கப்படும். ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது தொடர்பாக இக்குழுவின் பரிந்துரைகளை முன்னெடுத்துச் செல்ல செயலாக்கக்குழு அமைக்கப்படும் என்று  மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மேலும், வருகின்ற பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்ட ஒப்புதலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது., ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முன்மொழிவு நடைமுறைக்குச் சாத்தியமற்றதும், இந்தியாவின் பரந்துபட்ட தேர்தல் முறையின் சிக்கல்களைக் கவனத்தில் கொள்ளாததும், கூட்டாட்சியியலைச் சிதைப்பதும் ஆகும். வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு காலங்களில் தேர்தல் நடப்பது, அந்தந்த மாநிலத்துக்குரிய பிரச்சினைகள், ஆட்சி முன்னுரிமைகள் உள்ளிட்ட காரணங்களால் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஒவ்வாதது.

எதார்த்தத்துக்கு முரணாக அனைத்து மாநில அரசுகளின் ஆட்சிக்காலத்தையும் ஒரே வரிசையில் கொண்டு வருவது என்பது இயல்பாக நடக்கும் அரசு நிர்வாகத்துக்கு இடைஞ்சலை உருவாக்கும். இந்த முன்மொழிவு என்பதே மொத்தத்தில் பா.ஜ.க.வின் ஆணவத்தைத் திருப்திப்படுத்துவதற்கான நகர்வுதானே ஒழிய, இதனை ஒருபோதும் அவர்களால் நடைமுறைப்படுத்த இயலாது. இந்திய ஜனநாயகம் ஒற்றைக் கட்சியின் பேராசைக்கு ஏதுவாக வளைக்கப்படலாகாது.

மத்திய அரசானது இத்தகைய திசை திருப்பல் உத்திகளில் தனது ஆற்றலை வீணடிப்பதை விட்டுவிட்டு, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மாநிலங்களுக்கு வளங்களைச் சமமாக பகிர்ந்தளித்தல் ஆகிய முக்கியமான விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும்." இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like