தமிழ்நாட்டில் பாஜக உறுப்பினர் சேர்க்கையில் ஒரு கோடியை எட்டினால் 2026ல் பாஜக ஆட்சி உறுதி.. அண்ணாமலை..!

தமிழக பாஜகவில் மாவட்ட தலைவர்கள் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் நாமக்கல் மாவட்ட பாஜக தலைவராக ராஜேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனையொட்டி நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசுகையில், 3 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட மாவட்டங்களில், நாமக்கல் மாவட்டத்தில் தான் அதிக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அனைத்து கட்சிகளும் நிரந்தர பொதுச்செயலாளர், மாவட்டத் தலைவர்களை பார்க்கிறோம்.
ஆனால் பாஜக தான் உண்மையாக ஜனநாயக கட்சி. ஏனென்றால் கிளைத் தலைவர்கள் தொடங்கி 3 மாதங்களில் அடுத்தடுத்து உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று 33 மாவட்டங்களுக்கான தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்று முதல் பாஜகவின் முதல் உறுப்பினர்கள் சேர்க்கை பாகம் தொடங்குகிறது. தேசியத் தலைவரை தேர்வு செய்வதற்கு முன்பாக ஒரு பாகமும், அதன்பின் 2ஆம் பாகமும் நடைபெறும்.
முதல் உறுப்பினர் சேர்க்கை முகாம் முடிவில் தமிழ்நாட்டில் பாஜகவின் உறுப்பினர் எண்ணிக்கை 48 லட்சமாக உள்ளது. நம்முடைய இலக்கு ஒரு கோடி என்பதை நம்மால் எட்ட முடியும். இந்த 48 லட்சம் பேரின் முழு தகவல்களும் உள்ளது. அதேபோல் பதிவு செய்யப்படாதவர்கள் 4 லட்சம் பேர் இருக்கின்றனர். மிஸ்ட் கால் மூலம் இணைந்தவர்கள் அவர்கள். அதேபோல் பாஜகவுக்காக முழு நேரம் பணியாற்ற தயாராகிறேன் என்று கூறுப்படும் தீவிர உறுப்பினர்கள் எண்ணிக்கை 55 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அடுத்தக்கட்ட உறுப்பினர் சேர்க்கையில் நிச்சயம் தமிழ்நாட்டில் மட்டும் பாஜக, ஒரு கோடி உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரு கோடி உறுப்பினர்களை தாண்டிவிட்டால், 2026ல் ஆட்சியமைப்பது உறுதி என்று தெரிவித்துள்ளார்.