2026-ல் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமையும் - மத்திய அமைச்சர் எல்.முருகன்..!
அப்போது புரோகிதர்கள் முன்னிலையில் எதிரிகளை வலுவிழக்கச் செய்யும் சத்ரு சம்ஹார யாகம் மற்றும் பூஜை செய்தார் .தொடர்ந்து கோவிலில் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, குரு பகவான், சத்ரு சம்ஹார மூர்த்தி உள்ளிட்ட சன்னதியில் வழிபட்டார்.
பின்னர் அவர் இரும்பு ஆர்ச் பகுதியில் பா.ஜ.க. புதிய உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று உறுப்பினர்களை சேர்த்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக பொறுப்பேற்று முதல் 100 நாட்களில் 15 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை வழங்கி உள்ளார். நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளுக்கு மட்டுமே ரூ. 3 லட்சம் கோடி அளவிற்கு பிரதமர் ஒதுக்கீடு செய்துள்ளார்.
அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் பெண்கள் பெயரில் 3 கோடி வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முத்ரா கடன் ரூ. 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 11 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் பி, சி நகரங்களில் எப்.எம். ரேடியோ அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரெயில்வே திட்டத்திற்கு மட்டும் ரூ.6,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 2047-ம் ஆண்டு நாம் 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது உலக நாடுகளுக்கு வழிகாட்டும் நாடாக, உலகிற்கே தலைமை வகிக்கும் நாடாக, வல்லரசு நாடாக மாறும் வகையில் இந்த 100 நாட்களில் மிகப்பெரிய சாதனைகளை பாரத பிரதமர் செய்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வருவதற்காக கல்வியாளர்கள், நீதிபதிகள், துணை வேந்தர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் இருந்து கருத்து கேட்கப்பட்டு திட்டம் வரையறை தயாரிக்கப்பட்டுள்ளது. 2047-ல் இந்த நாடு வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக வேண்டும் என்றால் செலவினத்தை கட்டுப்படுத்த வேண்டும். தேர்தலில் அதிக செலவினங்கள் ஏற்படுகிறது.
இதனை கட்டுப்படுத்துவதற்கு நாட்டின் வளர்ச்சிக்காக ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியமான ஒன்று. அது காலத்தின் கட்டாயமானதாகும்.பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் ஏற்றுக் கொள்வதாக கையெழுத்திட்டது தமிழக அரசு. மத்திய அரசு வழங்கக் கூடிய நிதிக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அந்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அந்த நிதி வழங்கப்படும்.
தமிழக முதல்வர் முதலீட்டை ஈர்க்க வெளிநாடு சென்று வந்ததை பற்றி கேள்வி எழுப்பாமல் இருப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முதல்வர் மு.க.ஸ்டாலின் சேர்ந்து நடத்தக்கூடிய நாடகம் தான் மது ஒழிப்பு மாநாடு.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போது மத்திய வெளியுறவுத்துறை துரிதமாக செயல்பட்டு தமிழக மீனவர்களை மீட்டுக்கொண்டு வருகிறது. மீனவர்கள் எல்லை தாண்டி செல்லாமல் இருக்க ஜி.பி.எஸ். கருவிகள் போன்றவற்றை வழங்கி உள்ளோம். மீனவர்கள் ஆழ் கடலில் மீன் பிடிக்க மானியத்துடன் கூடிய பெரிய மீன்பிடி படகுகளை வழங்கி உள்ளோம்.
மீனவர்களுக்கு கடல் பாசி பூங்கா கொண்டு வந்துள்ளோம்.தொடர்ந்து மீனவர் நலனுக்காக தொடர்ந்து இந்த ஆட்சி பாடுபட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் உடனடியாக இலங்கை அரசிடம் இருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரான பின் தமிழகத்தில் என்ன மாற்றத்தை கொண்டு வர முடியும்?தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பின்பு டாஸ்மாக் கடை எண்ணிக்கை குறைக்கப்படும் என்று கூறிய தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த பின்பு டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளது. கிராமங்களில் அங்கன்வாடி மையம் பள்ளிக்கூடம் இருக்கிறதோ இல்லையோ டாஸ்மாக் உங்களை வரவேற்கிறேன் என்கின்ற விளம்பரங்கள் இருக்கின்றன.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது. வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், மகளிரணி மாநில பொதுச் செயலாளர் நெல்லையம்மாள், பாராளுமன்ற பொறுப்பாளர் விவேகம் ரமேஷ், பா.ஜ.க. நகர தலைவர் நவ மணிகண்டன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.