மன்னிப்பு கேட்காவிட்டால் செல்லூர் ராஜூ செல்லும் இடமெல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: பாஜக அறிவிப்பு!
மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார். அவரை கண்டிக்கிறோம்.
அண்ணாமலை நேர்மையின் அடையாளம். மோடி, வீரத்தின் அடையாளம். சத்ரபதி சிவாஜியை போல் தான் படித்த பட்டங்கள், வகித்த அரசு பதவிகளை நாட்டுக்காக தியாகம் செய்து தமிழக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக அண்ணாமலை பாஜகவில் சேர்ந்தார். காட்சியில் சேர்ந்த 3, 4 ஆண்டுகளில் ஆட்சியில் இருக்கும் திமுகவையும், ஆண்ட அதிமுகவையும் அரசியலில் ஆட்டம் காண வைத்து, தமிழகத்தில் மிக பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்து வருகிறார். தேச பக்தி நிறைந்த வாக்காளர்களின் துணிச்சல் மிகுந்த தலைவராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
அண்ணாமலையிடம் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்ட வேண்டும். தவறினால் தகுதி இல்லாமல் ஜெயலலிதாவின் காலில் விழுந்து பதவி பெற்று, பல கோடி ரூபாய் ஊழல் செய்து அரசியல்வாதியாக காட்டி வரும் செல்லூர் ராஜூவுக்கு எதிராக அவர் செல்லும் இடமெல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.