1. Home
  2. தமிழ்நாடு

அதிமுகவில் உள்ள பிளவை பயன்படுத்தி குளிர் காயலாம் என்று பாஜக நினைக்கிறது - கார்த்தி சிதம்பரம்..!

1

மத்திய பாஜகவையும், பிரதமர் மோடியையும் தொடர்ந்து விமர்சித்து வருபவர் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ஆவார்.. கடந்தவாரம்கூட ஒரு பேட்டியில் பிரதமர் மோடியை காட்டமாக விமர்சித்து கேள்வி எழுப்பியிருந்தார். “காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை படித்து புரிந்து கொள்ளாமல் மோடி பேசுகிறார். ஜனாதிபதியினுடைய நிறத்தை சொல்லி, சிறுபான்மை மக்களை சிறுமைபடுத்துதல் போன்றவற்றைதான் செய்து வருகிறார்.. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம், 10 வருஷத்தில் இவர்கள் செய்த சாதனைகள் எதுவுமே இல்லை என்பதை. காங்கிரஸ் கட்சி அதானி, அம்பானியிடம் பணம் வாங்கியிருப்பதாக, பெரிய குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் மோடி. அப்படின்னா, உடனடியாக அமலாக்கத்துறையை வைத்து அதானி, அம்பானியை விசாரிக்க வேண்டியதுதானே? காங்கிரஸில் யாராவது டெம்போவில் அதானி, அம்பானியிடம் பணம் வாங்கியிருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? டெம்போ, அதானி, அம்பானி அப்புறம் ஜனாதிபதியிடம் தோலின் நிறம் என இப்படியெல்லாம் ஏன்தான் பேசிக்கொண்டு இருக்கிறாரோ தெரியவில்லை” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 2வது முறையாக வெற்றியை பெற்றுள்ளார்.. இதையடுத்து மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், மீண்டும் பாஜக அரசை அட்டாக் செய்து பேசினார். அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு எப்போதுமே இந்தி, இந்துத்துவ அரசியலை விரும்புவது கிடையாது.. எல்லோரையும் அரவணைத்துச் செல்கிற அரசைத்தான் விரும்புகிறது.. அண்ணாமலைக்கு நல்ல பிறந்தநாள் பரிசு கிடைக்கவில்லை.. தமிழ்நாட்டின் கள நிலவரத்தை அவர் இப்போது புரிந்துகொண்டு இருப்பார் என்று நம்புகிறேன். 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பாஜக ஒரு கதையை உருவாக்கியது, பிறகு 300 இடங்கள் என்று சொன்னார்கள், இப்போது பெரும்பான்மைக்கு கீழே இருக்கிறார்கள்.

கடந்த 2 முறை ஒரு அசுர பலத்துடன் கூடிய மெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சி புரிந்தது.. ஆனால், நாடாளுமன்றத்திற்கு வந்து பதில் சொல்லும் பழக்கமே பிரதமருக்கு கிடையாது.. அதேபோல, ஒரு மைனாரிட்டி அரசை நடத்திய அனுபவமும் பிரதமர் மோடிக்கு கிடையாது.. பெரும்பான்மையான உறுப்பினர்களை வைத்திருந்த அரசை நடத்திதான் அவருக்கு வழக்கம். கேள்விகளுக்கு பதில் சொல்லும் வழக்கமும் கிடையாது. அதேபோல, எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் மனப்பான்மை அவருக்கு இருக்கிறதா இல்லையா என்பதும் தெரியாது. இந்த கூட்டணி அரசில் மற்ற கட்சிகளையும் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டிய சூழல், நாடாளுமன்றத்திற்கு வந்து பதில் சொல்வது எல்லாம் அவருக்கு புதிய அனுபவம்தான்.. இதையெல்லாம் அவர் எப்படி கையாளப்போகிறார் என்பதும் தெரியவில்லை.. அயோத்தியில் பாஜக வெற்றிபெறவில்லை.. இதனை ராமபரமாத்மா கொடுத்த வரமாகவே பார்க்கிறேன்.

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் அடித்தளம் வரை சென்றுவிட்டது.. இந்த தேர்தலை என்ன சொல்லி மக்களை சந்திப்பது என்ற தயக்கத்தில் இருந்தார்கள்.. அதேசமயம், அதிமுகவில் உள்ள பிளவை பயன்படுத்தி குளிர் காயலாம் என்று பாஜக நினைத்தால் அவர்களின் கனவு நிறைவேறாது. இவ்வாறு கார்த்தி சிதம்பரம். கூறினார்.

Trending News

Latest News

You May Like