பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பயம் வந்துவிட்டது - கே.பி.முனுசாமி காட்டம்..!
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஒரு கட்டத்தில் அவரை தற்கூறி என்றும் வசைபாடினார். இதற்கு அதிமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் பல இடங்களில் போராட்டம் நடத்தினர்.
அதே சமயம் திமுக சீனியர்களை பழைய மாணவர்கள் என ரஜினிகாந்த் கூறியதும், அதற்கு துரைமுருகன் ஆற்றிய எதிர்வினையும் அரசியல் அரங்கில் விவாதங்களை உண்டாக்கியுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, “பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு பயம் வந்துவிட்டது. தான் தோன்றித்தனமாக பேசுவதால் தலைமை பொறுப்பு தமக்கு இருக்காது, இருக்கும் வரையில் ஏதாவது கருத்துகளை சொல்லிவிட்டு செல்லலாம் என பேசுகிறார். பாஜக தலைமை நிச்சயமாக அண்ணாமலையை தலைமை பொறுப்பிலிருந்து வெளியேற்றும்.
அதற்குத்தான் அண்ணாமலை லண்டனுக்கு படிக்க செல்வதாகக் கூறி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி அரசியல் பின்புலம் இல்லாதவர். தனது உழைப்பால் 52 ஆண்டுகள் கட்சிக்காக தன்னை அர்ப்பணித்து கொள்கையில் இருந்து பிறழாமல் இருந்த காரணத்தால் ஒரு கட்சியின் தலைமை பொறுப்புக்கு வந்துள்ளார். அண்ணாமலை போல யாருடைய சிபாரிசிலும் எடப்பாடி பழனிசாமி தலைவர் ஆகவில்லை. இபிஎஸுக்கும் அண்ணாமலைக்கும் இடையேயான வரலாறு மலைக்கும் மடுவுக்குமானது.
மக்களவைத் தேர்தலில் 25க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெறுவோம் என்று அண்ணாமலை கூறினார். ஒரு இடமாவது பாஜக கூட்டணி வெற்றிபெற்றதா?. ஆகவே, வரும் 2026ஆம் ஆண்டிலும் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேதான் நேரடி போட்டி. அதிமுக அதிமுக வெற்றிபெற்று எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் கட்டிலில் அமர்வார்” என்று காட்டமாக கருத்து தெரிவித்தார்.
மேலும், “நடிகர் ரஜினிகாந்த் தான் செல்கிற இடத்தில் அவர்கள் மகிழ்ச்சி அடையும்படி கருத்துக்கள் சொல்லக்கூடியவர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கருத்தை நேரடியாக பொது மேடையில் சொல்ல முடியாத காரணத்தால், நடிகர் ரஜினிகாந்தை வைத்து சீனியர்களை வெளியேற்ற பிள்ளையார் சுழியை போட்டுள்ளார்” என்றும் கே.பி.முனுசாமி கருத்து தெரிவித்தார்.