அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்..!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் தொடங்கிவிட்டன. அதே சமயம் திமுகவை எதிர்க்க அதிமுக, பாஜக கூட்டணி அமைக்க வேண்டும் என்ற குரல்களும் இரு கட்சிகளுக்குள்ளும் எழுந்தன. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி எந்த முன்னறிவிப்பும் இன்றி டெல்லி சென்றார். அங்கு உள் துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக நிர்வாகிகள் சகிதம் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சுமார் இரண்டு மணி நேரம் வரை இந்த சந்திப்பு நடந்துள்ளது.
அடுத்த சிறிது நேரத்தில் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில், ‘2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்று பதிவிட்டார். இதனால் அதிமுக - பாஜக கூட்டணி ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், மக்கள் பிரச்னைக்காகவே அமித்ஷாவை சந்தித்ததாக இபிஎஸ் மழுப்பலான விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அமித்ஷாவை நேரில் சந்தித்து தமிழக அரசியல் சூழல் குறித்து பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமித்ஷா உடனான சந்திப்பின் போது அண்ணாமலையை பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் என அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சந்திப்புக்கு பிறகான அண்ணாமலையின் டெல்லி பயணம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.