1. Home
  2. தமிழ்நாடு

பா.ஜ.க. வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியீடு கோவையில் அண்ணாமலை - தென் சென்னையில் தமிழிசை..!

1

பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், கடந்த சில தினங்களாக நடந்த ஆலோசனைகளுக்குப் பிறகு, தமிழகத்தில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே நேற்று சென்னையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஒரு மகிழ்ச்சியான செய்தி. தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான பங்கீட்டை முடித்துள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்களுடன் கலந்துபேசி 39 தொகுதிகளுக்கும் பங்கீடு முடிவடைந்துள்ளது.  பா.ஜ.க.வின் வேட்பாளர்கள் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளனர். பா.ஜ.க.வின் சின்னத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மேலும் ஒரு 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் 20 வேட்பாளர்கள் மற்றும் பா.ஜ.க. சின்னத்தில் போட்டியிடும் 4 வேட்பாளர்கள் உள்பட 24 பேரின் வேட்பாளர் பட்டியல் எந்தநேரத்திலும் வெளியாகலாம். 

அதே போல், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அவர்களது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அவர்கள் அறிவிப்பார்கள். பா.ஜ.க. ஒரு தேசிய கட்சி. ஒரு மாநிலத் தலைவர் இங்கிருந்து வேட்பாளர்களை அறிவிப்பது வழக்கம் அல்ல. எனவே, அதற்கான அனைத்து தகவல்களையும் இங்கிருந்து தலைமைக்கு அனுப்பி விட்டோம். எங்கள் கூட்டணியில், சுமுகமாக, மகிழ்ச்சியாக, திருப்திகரமாக எல்லோருக்கும் என்ன வேண்டுமோ அது கிடைத்திருக்கிறது. அனைவரும் வளர வேண்டும் என்ற அடிப்படையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் பங்கீடு முடிந்திருக்கிறது. 

தமிழகத்தில் ஒரு மாற்று அரசியல் வரவேண்டும் என்றால், அதில் பல கட்சிகள் இருக்க வேண்டும். பல வண்ணங்களும், சின்னங்களும் இருக்க வேண்டும். அனைத்து சமூகத்தில் இருந்தும் தலைவர்கள் இருக்க வேண்டும். அப்போதுதான், மக்களுக்கு அந்த கூட்டணியின் மீது ஒரு நம்பிக்கை வரும்.  திராவிட அரசியலுக்கு மாறுபட்ட அரசியலை பா.ஜ.க. முன்னெடுக்கிறது. அதற்கான ஒரு பெரிய முயற்சி இந்த 2024 மக்களவைத் தேர்தல். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழக மக்கள் 39 தொகுதிகளிலும் மிகப் பெரிய ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.  

இந்நிலையில், பா.ஜ.க. சார்பில் தமிழகத்தில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தேசிய தலைமை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் முதற்கட்ட பட்டியல் வெளியானது. அதன்விவரம் பின்வருமாறு. 1) தென் சென்னை: தமிழிசை சவுந்தரராஜன், 2) கோவை : அண்ணாமலை, 3) கன்னியாகுமரி: பொன். ராதாகிருஷ்ணன், 4) நெல்லை : நயினார் நாகேந்திரன், 5) வேலூர் : ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக் கட்சி), 6) மத்திய சென்னை: வினோத் பி.செல்வம், 7) நீலகிரி(தனி தொகுதி): எல்.முருகன், 8) கிருஷ்ணகிரி: சி.நரசிம்மன் 9) பெரம்பலூர்: பாரிவேந்தர் (ஐ.ஜே.கே).

முன்னதாக தூத்துக்குடி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தூத்துக்குடி தொகுதி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த தொகுதிக்கு நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டது பா.ஜ.க.வினருக்கே வியப்பை கொடுத்தது. ஆனால், சிறிது நேரத்தில் பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் மாற்றப்பட்டு புதிய பட்டியல் வெளியானது. இதில், நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. தி.மு.க கூட்டணியில் நெல்லை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.கவில் சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுகிறார்.

BOX - 1

பா.ஜ.க. முதல் கட்ட பட்டியல்:

1) தென் சென்னை: தமிழிசை சவுந்தரராஜன்.

2) கோவை: அண்ணாமலை.

3) கன்னியாகுமரி: பொன். ராதாகிருஷ்ணன்.

4) நெல்லை : நயினார் நாகேந்திரன்.

5) வேலூர் : ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக் கட்சி).

6) மத்திய சென்னை: வினோத் பி.செல்வம்.

7) நீலகிரி(தனி தொகுதி): எல்.முருகன்.

8) கிருஷ்ணகிரி: சி.நரசிம்மன்.

9) பெரம்பலூர்: பாரிவேந்தர் (ஐ.ஜே.கே).

Trending News

Latest News

You May Like