ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்து கர்நாடகா தப்ப உதவிய பாஜக பிரமுகர்.. விசாரணையில் பரபரப்பு தகவல்கள் !

ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருக்க உதவியதாக பாஜக நிர்வாகியும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக ஆட்சியின் போது பால்ளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் பதவி காலத்தில் ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதில் அவரை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்ததை அறிந்து தலைமறைவானார். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
கிட்டதட்ட இரண்டு வாரக்காலத்துக்கும் மேலாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்தது யார் என்ற தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்ததாக பாஜக பிரமுகர் உட்பட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது கர்நாடகாவில் ராஜேந்திர பாலாஜியுடன் சேர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதில், ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் ராமகிருஷ்ணனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜேந்திர பாலாஜி கிருஷ்ணகிரியில் தலைமறைவாக இருந்ததாகவும், அவரை கர்நாடக மாநிலத்தின் ஹசன் பகுதிக்கு அழைத்து சென்றது ராமகிருஷ்ணன் தான் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜிக்கு ராமகிருஷ்ணன் அடைக்கலம் வழங்கியுள்ளார். அவருடன் சேர்ந்து ராமகிருஷ்ணனின் உறவினர் நாகேஷ், விருதுநகர் மாவட்ட அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக காவல்துறையின் பிடியில் சிக்காமல் இருக்க ஒரு இரவில் ஒரு இடத்தில்தான் ராஜேந்திர பாலாஜி தங்கியுள்ளார். தினமும் அவர் பயணத்திலேயே இருந்துள்ளார். அதாவது ஒரே இடத்தில் தங்காமல் அதிகநேரம் பயணம் செய்துக்கொண்டே இருந்துள்ளார். தலைமறைவாக இருந்ததற்கு அவர் அதிக பணம் செலவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜிக்கு இரண்டு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உதவியுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதால் விசாரணையின் போது மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in