பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை முன்ஜாமின்..!
கேலோ இந்தியா போட்டிகளின் துவக்க விழாவிற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது, அவரை வரவேற்க ஆட்களை அழைத்து வருவதற்காக பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் பாஜக விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, கார் ஓட்டுனர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் மீது கோட்டூர்புரம் போலீசார், அத்துமீறி வீடு புகுந்து தாக்குதல், காயப்படுத்துதல், மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில், அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு எதிரான புகார் குறித்து முறையாக விசாரணை நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமர் பிரசாத் ரெட்டி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் ஆஜராகி, பொய் புகாரில் பதிவுசெய்யப்பட்ட பொய்யான வழக்கு என்பதால் முன் ஜாமீன் வழங்க வேண்டுமென வாதிட்டார். மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்திற்கு உதவியாக இருந்த அமர் பிரசாத் ரெட்டிக்கு எதிராக உள்நோக்கத்தோடு இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார்.
காவல்துறை தரப்பில், அரசியல் உள் நோக்கத்துடன் வழக்கு பதியவில்லை எனவும், அவர் சார்ந்த கட்சியின் பெண் நிர்வாகியே தன்னை தாக்கி தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து, அமர் பிரசாத் ரெட்டிக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதி கார்த்திகேயன், 10 நாள்களுக்கு கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார். அவ்வாறு ஆஜராகாவிட்டால் ஜாமீன் மனுவை ரத்து செய்ய காவல்துறை மனுதாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தி உள்ளார்.