பாஜக மாவட்டச் செயலாளர் கைது..! சொந்த கட்சி பெண் நிர்வாகியிடம் மோசடி..?
சென்னை தண்டையார் பேட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் நவமணி. பாஜக கட்சியை சேர்ந்த இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக இருக்கும் செந்தில் என்பவரிடம் 2022ம் ஆண்டு ரயில் நிலையத்தில் கடை வைத்து தருவதாக கூறி ரூ.2.50 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால், பணத்தை பெற்றுக்கொண்டு கடையும் வைத்து தராமல் பணத்தையும் திரும்ப தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த அந்த பெண் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால், செந்தில் தர மறுத்து பிரச்சனை செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக பாஜக நிர்வாகியான மாவட்ட செயலாளர் செந்தில் நவமணியை மிரட்டியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த நவமணி தன் தற்கொலைக்கு செந்தில் தான் எனவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்க மாத்திரை கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பின்னர் வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் பாஜக பெண் நிர்வாகியை தற்கொலை முயற்சிக்குத் தூண்டியதாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் செந்தில் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.