தமிழக முதல்வருக்கு நன்றி சொன்ன பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன்..!
இந்த கூட்டத்தில் ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களும் தங்கள் வார்டுகளில் உள்ள குறைகளை தெரிவித்து பேசினார்கள். 90வது வார்டு கவுன்சிலர் ராஜகோபால் பேசுகையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மொத்தமுள்ள 200 வார்டுகளில், 140 வார்டுகளில் நகர்ப்புற நல வாழ்வு மையம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. அப்படி திறக்கப்பட்ட வார்டுகளில், என்னுடைய 90-வது வார்டும் ஒன்று. இங்கு நகர்ப்புற நலவாழ்வு மையம் திறக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அந்த நகர்ப்புற நல வாழ்வு மையம் திறக்கப்படவில்லை என்றார்.
இதற்கு பதில் அளித்து மேயர் பிரியா பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சியில் 140 வார்டுகளில் நகர்ப்புற நல வாழ்வு மையங்களை திறந்து வைத்தார். மீதமுள்ள 60 வார்டுகளில்தான் 90-வது வார்டு இருக்கிறது. நகர்ப்புற நல வாழ்வு மையத்துக்கு தேவையான டாக்டர் நியமனம் செய்யப்பட்டு, திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் பேசும் போது, தனது வார்டுகளில் உள்ள பள்ளிகளில் பிரெஞ்சு மொழியைக் கற்பிக்கிறார், சில நாடுகளைத் தவிர பிரெஞ்சு மொழி பேசுவதில்லை . நாட்டின் பிற பகுதிகளிலும் மாணவர்கள் தொடர்பு கொள்ளவும், யுபிஎஸ்சி தேர்வுகளுக்கும் உதவும் என்பதால் சென்னை மாநகராட்சி ஏன் ஹிந்தியைக் கற்பிக்க முடியாது என்றும் கேட்டார்.
இதற்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் பதில் அளித்து பேசுகையில், ஸ்கில் டெவலப்மெண்ட் முக்கியம், தமிழ் முக்கியம், ஆங்கிலம் முக்கியம், பிரெஞ்சு மொழியை கூடுதலாக கற்பிக்கிறோம். ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழியைக் கற்பிக்கிறோம். பிரெஞ்சு மொழியைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று நாங்கள் மாணவர்களிடம் திணிக்கவில்லை.. எந்த குழந்தைகள் விருப்படுகிறார்களோ, அவர்களுக்கு நாங்கள் கற்றுத்தருகிறோம்.
ஆங்கிலத்தை பொறுத்தவரை தினமும் பள்ளி ஃபிரேயரில் நாங்கள் ஆங்கில வார்த்தை அர்த்தத்துடன் தினமும் சொல்லிக்கொடுக்க வலியுறுத்தியுள்ளோம். அந்த வார்த்தையை வைத்து ஒரு புதிய வரிகளையும் உருவாக்கி தர சொல்லியிருக்கிறோம். அதுபடி நடக்கிறது. அதேபோல் பள்ளி வகுப்பறையில் தினமும் ஆங்கில நியூஸ் பேப்பரை கொடுத்து உச்சரிப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகிவற்றை செய்து வருகிறோம். அதேபோல் ஆங்கில வகுப்பின் போது, 10 நிமிடம் ஒவ்வொரு குழந்தையையும் ஆங்கிலத்தில் உரையாட வைக்கிறோம். இவை எல்லாம் சென்னை மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டு வருகிறது என்றார்.
அப்போது குறுக்கிட்ட உமா ஆனந்தன், ஆனாலும் அதுபோதுமானதாக இல்லை.. அதை சிலபஸ் ஆகவும், சப்ஜெக்டாகவும் எடுக்க வேண்டும்.. உயர்கல்விக்கு செல்ல மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதேநேரம் நீங்கள் சொல்வது போல் குழந்தைகள் படிப்பதை நான் கேட்ட போது உச்சரிப்பு, சரியாக இல்லை என்றார்.
இதற்கு பதில் அளித்து மாநகராட்சி மேயர் பிரியா பேசுகையில், மழலையர் பள்ளி முதலே மாணவர்களுக்கு தேவையான திறன் மேம்பாடு பயிற்சியும், ஆங்கிலத்தில் பேசுவது தொடர்பாக சரியான உச்சரிப்பு பயிற்சியும் வழங்கப்படுகிறது . ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் சொல்லித்தரப்படுகிறது. உச்சரிப்பு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் வேறுபடும். ரஷ்யாவில் உச்சரிப்பு ஒரு மாதிரி இருக்கும். அமெரிக்காவில் உச்சரிப்பு ஒரு மாதிரி இருக்கும். இந்தியாவில் ஒரு மாதிரி இருக்கும்.. நாம் அமெரிக்காவில் உள்ளது போல் இங்லீஸ் பேச வேண்டும் என்று முயற்சிக்க முடியாது. அதேபோல் ஆங்கிலத்தில் நாம் பேசுவது அவர்களுக்கு புரிகிறதா, அதை நம்மிடம் திரும்பவும் ஆங்கிலத்தில் பதில் அளிக்கிறார்களா.. என்பதை உறுதி செய்யும் தரமான கல்வியை சென்னை மாநகராட்சி வழங்கி வருகிறது.. நம் நாட்டில் ஒரு உச்சரிப்பு உள்ளது. ஆனால் மேற்கத்திய நாடுகளின் ஆங்கில மொழி உச்சரிப்புகளில் மாணவர்களை பேச வைக்க முடியாது" இவ்வாறு மேயர் பிரியா கூறினார்.
முன்னதாக சென்னை மாநகராட்சி கூட்டத்தில் விவாதத்தின்போது, பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், 'சாலை அமைப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு நான் கோரிக்கை வைத்தேன். கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்த முதல்வருக்கு நன்றி' என்று தெரிவித்தார். அதற்கு, துணை மேயர் மகேஷ்குமார் பேசுகையில், பாஜக உறுப்பினர் முதல்வருக்கு நன்றி தெரிவித்ததை நாங்கள் வரவேற்கிறோம். அதைதொடர்ந்து தி.மு.க கவுன்சிலர்களும் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.