ஒரு தொகுதியில் கூட பாஜவால் வெற்றி பெற முடியாது - பினராயி விஜயன் பேட்டி..!

கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆலப்புழாவில் நிருபர்களிடம் கூறியது: மதவாத சக்திகளை கேரளாவில் கால் பதிக்க நாங்கள் விட மாட்டோம். சங்பரிவார் அமைப்புகளின் மிரட்டல்களையும், அச்சுறுத்தல்களையும் நாங்கள் மார்பை விரித்துக்கொண்டு எதிர்ப்போம். அவர்களை ஆட்சியில் இருந்த அகற்றுவதற்கு கடைசி வரை போராடுவோம். வரும் தேர்தலில் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட பாஜவால் வெற்றி பெற முடியாது. எந்தத் தொகுதியிலும் இரண்டாவது இடம் கூட அவர்களுக்கு கிடைக்காது. கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ கேரளாவில் கணக்கைத் தொடங்கியது.
ஆனால் அது அவர்களது வலிமையால் கிடைத்த வெற்றி அல்ல. அந்த வெற்றிக்கு அவர்களால் உரிமை கொண்டாடவும் முடியாது. அடுத்த தேர்தலில் அவர்களது கணக்கை முடித்து வைப்போம் என்று நாங்கள் சவால் விட்டோம். அது போலவே 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜ வெற்றி பெற்ற நேமம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சிவன்குட்டி வெற்றி பெற்று அவர்களது கணக்கை முடித்து வைத்தார். பாஜவின் எந்த தில்லுமுல்லும் கேரளாவில் பலிக்காது. உபா, பண மோசடி தடுப்பு சட்டம் உள்பட மக்களை பாதிக்கும் சட்டங்களை ரத்து செய்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.