நீட் தேர்வில் பாஜக - அதிமுக சதி! உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு புகார் !
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு முறை மட்டுமே அரசு இலவச பயிற்சி வழங்கும் என்ற நிலைப்பாட்டிற்கு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் பேசும் போது, நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசு ஒரு முறை மட்டுமே இலவச பயிற்சி அளிக்கும். இரண்டாம் முறை நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தனியார் மூலம் பயிற்சி பெற்று தான் தேர்வு எழுத முடியும் என உறுதிபடத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆள்மாறாட்ட முறைகேட்டை அடுத்து, நீட் OMR பதில் தாள்களில் திருத்தங்கள் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. 10 மற்றும் +2 -ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தவர் கூட நீட்டில் பூஜ்ஜியம் மார்க் எடுப்பது எப்படி? திறமை, தகுதி இருந்தாலும் யார் மருத்துவராக வேண்டும் என்பதை வெளியில் இருக்கும் சிலர் தீர்மானிக்கிறார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இதைக்கேள்வி கேட்காமல் ஒருவருக்கு ஒருமுறை தான் அரசு பயிற்சி மையங்களில் நீட் பயிற்சி தரப்படும் என்கிறது அடிமை அரசு. இது மாணவர்களை தனியார் கோச்சிங் சென்டர் நோக்கித் தள்ளும் முயற்சி தான் என்பதையே காட்டுகிறது. தனியார் பயிற்சி மையத்திற்கு செல்ல முடியாத கிராமத்து ஏழை எளிய பிள்ளைகள் நீட் தேர்வில் இருந்து விலகிவிடுவர் இது தான் பாஜக -அதிமுகவின் கூட்டு சதி என்றும், இந்த சதியை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் துணை கொண்டு முறியடிப்போம் என தெரிவித்துள்ளார்.