10 கோடி இலக்கை எட்டிய பா.ஜ., உறுப்பினர் எண்ணிக்கை..!
பா.ஜ.,வின் உட்கட்சித் தேர்தலுக்கு அச்சாரமாக உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த 11ல் துவங்கிய இந்த உறுப்பினர் சேர்க்கை பணி, இந்த மாத கடைசி வரை நடைபெற உள்ளது.
உறுப்பினர் சேர்க்கை முடிந்த பின், அந்த படிவங்கள் மீதான பரிசீலனைகள் குறித்த பணிகளை நவ., 1 முதல் 5 வரையில் மேற்கொள்வது என திட்டமிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் வழியாக இல்லாமல் நேரடியாக உறுப்பினர்கள் மண்டல அளவில் சேர்க்கப்பட்டு வரும் நிலையில், சாதனை அளவாக நேற்று உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 கோடி என்ற இலக்கை எட்டியது.இதை, மேலும் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு, அடுத்த கட்டமாக 11 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை எட்டுவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீவிர உறுப்பினர் சேர்க்கை குறித்த பயிலரங்கம், டில்லியில் நேற்று பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்தது.
மண்டலம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் அனைத்து பணிகளும் முடிவுக்கு வந்த பின், வரும் ஜனவரியில் பா.ஜ., தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும்.
இது தவிர, பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு சார்பாக, 'ஆடியோ பிரிட்ஜ்' என்ற பிரசாரம் துவங்கப்பட்டுள்ளது. 'மோடியின் நண்பர்கள்' என்ற பெயரில் 26,000 பேர் இந்த பிரசாரத் திட்டத்தில் இணைந்துள்ளனர்.