10 பைசாவுக்கு பிரியாணி! அலைமோதிய மக்கள் கூட்டம்!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள இண்டூர் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட உணவகத்தில் அசைவ பிரியர்களை மகிழ்விக்கும் வகையில் 10 பைசாவுக்கு சுடச்சுட பிரியாணி வழங்கப்பட்டது.
ஒகேனக்கல்லைச் சேர்ந்த பாலாஜி என்பவர் எம்சிஏ படித்துவிட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னை மற்றும் பெங்களூருவில் பல்வேறு மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றி வந்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக வேலை இழந்த அவர், பொது ஊரடங்கு காரணமாக தனது சொந்த ஊரான இண்டூர் பகுதிக்கு திரும்பியுள்ளார். அங்கு ஒரு சிறு தொழில் தொடங்க முடிவு செய்தார். அதற்காக அவர் தேர்வு செய்தது உணவகத் தொழில். அதில் புதுமையைப் புகுத்த வேண்டும் என நினைத்து மக்களை கவரும் வகையில் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, உணவகம் தொடக்க நாள் அன்று 10 பைசாவுக்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவித்தார். இந்த தகவல் காட்டு தீ போல மாவட்டம் எங்கும் பரவியது.
இதனால், அப்பகுதி மக்கள் 10 பைசாவுக்கு அலைந்தனர். தற்போது ரூ. 1, 5, 10 நாணயங்கள் மட்டுமே கிடைப்பதால், 10 பைசாவுக்கு திண்டாடினர். இருப்பினும் தங்கள் வீடுகளில் முன்பு வேண்டா வெறுப்பாக வீசியெறிந்த 10 பைசாவை தேடி எடுத்து வந்தனர். சிலர் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் போன் போட்டு விசாரித்து 10 பைசாவை கொண்டு வந்தனர்.
இதனால் பிரியாணியை வாங்க அக்கம் பக்கத்தில் உள்ள கிராம மக்கள் கூட்டம் அலைமோதியது. கட்டுக்கடங்காத கூட்டத்தை கண்ட உணவக உரிமையாளர், பிரியாணி வங்க வந்தவர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்தார். இனையடுத்து, அவர் அறிவித்தபடியே 200 பேருக்கு மட்டுமே 10 பைசாவிற்கு பிரியாணி வழங்கப்பட்டது. 10 பைசாவுக்கு பிரியாணி கிடைத்த மகிழ்ச்சியில் அசைவ பிரியர்கள் மிகுந்த உற்சாகத்தில் துள்ளிக்குதித்தனர்.