தமிழகத்தில் பைக் டாக்ஸி இயக்க தடை ?
வணிக நோக்கத்துக்காக (பைக் டாக்ஸி) பயன்படுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள்மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மண்டல மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்குத் துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
பைக் டாக்ஸி விவகாரத்தில் மத்திய அரசுடன் இணைந்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு பைக்குகளை வாடகை ரீதியாக இந்தியா முழுவதும் பயன்படுத்த அனுமதித்துள்ளது. இதுகுறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
பைக் டாக்ஸிக்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து வருகிறோம். பைக் டாக்ஸி பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. அதே சமயம் ஆட்டோ டிரைவர்கள் பாதிக்கப்படுவதாகவும் கருத்து நிலவுகிறது.
பைக் டாக்ஸிக்கு ஒரு புறம் வரவேற்பு, மறுபுறம் எதிர்ப்பு இருந்தாலும் இதில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பு கருதியே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சிறு விபத்து ஏற்பட்டால் கூட நீதிமன்றத்தில் நிவாரணம் மறுக்கப்படுகிறது.