சென்னையில் இனி ஒரு மணி நேரத்திற்கு பைக் நிறுத்த ரூ.20 கட்டணம்..!

சென்னை மாநகராட்சியில் வாகன நிறுத்தங்களை ஒழுங்குப்படுத்தும் வகையில், மெரினா, பெசன்ட் நகர் மற்றும் பல்வேறு இடங்களில் சாலையோர வாகன நிறுத்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
தனியார் நிறுவனம் வாயிலாக செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தில், ஒரு மணி நேரத்திற்கு கனரக வாகனங்களுக்கு 40 ரூபாய், நான்கு சக்கர வாகனங்களுக்கு - 20 ரூபாய், இருசக்கர வாகனங்களுக்கு ஐந்து ரூபாய் என, கட்டணம் வசூலிக்கப்பட்டது.
ஆனால், அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை தாண்டி, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், அந்நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின், தமிழ்நாடு முன்னாள் படை வீரர் கழகம் சார்பில், வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது அதுவும் முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம், காவல்துறை இணைந்து, அண்ணா நகரில், 'ஸ்மார்ட் பார்க்கிங்' மேலாண் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்கான கருத்து கேட்பு கூட்டம், அண்ணா நகரில் நேற்று நடந்தது.
இந்த திட்டத்தின் வாயிலாக, அண்ணா நகரில் 25 கி.மீ., நீள சாலைகளில், 2,000 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட, 5,000 வாகனங்கள் நிறுத்தப்பட உள்ளது. அண்ணா நகரை தொடர்ந்து, மாநகராட்சி முழுதும், இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணைய உறுப்பினர் செயலர் ஜெயகுமார் கூறியதாவது:
அண்ணா நகர் பகுதியில், 25 கி.மீ., நீளமுடைய சாலைகளில், வாகன நிறுத்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் 5,000 வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளது. 'பீக் ஹவர்ஸ்' என்ற நெரிசல் நிறைந்த நேரத்தில், 3,000க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தலாம்.
இதில், 70 சதவீத வாகன நிறுத்தங்கள், அண்ணா நகர் 2வது, 3வது, 6வது அவென்யூ சாலைகளில் உள்ளன. மீதமுள்ள நிறுத்தங்கள், உட்புற சாலைகளான, 11வது முதல் 13 வது பிரதான சாலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றில் கனரக வாகனங்கள் முதல் இருசக்கர வாகனங்கள் வரை, ஒவ்வொரு நாளும் முதல் 10 நிமிடங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. அதற்கு மேல் நிறுத்தப்பட்டிருந்தால், ஒரு மணி நேரத்திற்கு என்ற அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும்.
இருசக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய், நான்கு சக்கர வாகனங்களுக்கு 40 ரூபாய், கனகர வாகனங்களுக்கு 60 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படும்.
மேலும், காலை 9:00 முதல் இரவு 11:00 மணி வரை மட்டும் வாகனங்கள் நிறுத்த கட்டணம் உண்டு. அதன்பின் இரவு 11:00 மணி முதல் காலை 9:00 மணி வரை கட்டணம் வசூலிக்கப்படாது.
வாகன நிறுத்த இடங்களில், 1,200 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்படும். 100 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
அத்துடன், வாகன நிறுத்த கட்டண திட்டத்திற்கு, மொபைல் செயலி உருவாக்கப்படும். இதன் வாயிலாக, நிறுத்தங்களை முன்கூட்டியே பதிவு செய்யவும், கட்டணம் செலுத்தவும் முடியும்.
நேரடியாக வருவோர், கியூஆர்., குறியீடு வாயிலாக பதிவு செய்தும், கட்டணம் செலுத்தலாம். இதற்கான ஒப்பந்தம் ஓரிரு வாரங்களில் வெளியிடப்பட்டு, செப்., மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
சாலையோர போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்காக தான், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.