#BIG NEWS : இனி ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை..!

அண்ணாமலையின் தொடர் சீண்டல்களால் பொறுமை இழந்த அதிமுக தலைமை, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக கடந்த மாதம் அதிரடியாக அறிவித்தது. இந்த அறிவிப்பால் பூரித்துப் போன அதிமுக தொண்டர்கள், தமிழகம் முழுவதும் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். ஆனால், திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் அதிமுகவின் இந்த அறிவிப்பை ஒரு நாடகம் என்று விமர்சித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இன்றைக்கு பாஜகவிடம் இருந்து விலகுவது போல காட்டிக்கொண்டு, பின்னர் தேர்தல் நெருங்கும் சமயத்திலோ அல்லது தேர்தலுக்கு பிறகோ பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துக் கொள்ளும். அதிமுக என்றைக்குமே பாஜகவின் அடிமை தான்" என்று கூறினார்.
ஆனால், அதிமுக தலைமையும், அதன் நிர்வாகிகளும் இதுவரை திமுகவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. இதனால் மற்ற அரசியல் கட்சிகளின் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிமுக என்றாவது ஒரு நாள் பாஜகவுடன் கூட்டணி வைத்துவிடும் என்கிற எண்ணம் இருந்து வருகிறது.
இந்நிலையில், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில முக்கியமான விஷயங்களை ஆணித்தரமாக தெளிவுப்படுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில், "வரும் நாடாளுமன்றத் தேர்தல் அதிமுகவிற்கு மிக மிக முக்கியமான தேர்தல். எனவே, இந்த தேர்தலில் அதிகப்படியான தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அதற்கேற்ற உழைப்பை நீங்கள் கொடுக்க வேண்டும். அதேபோல, பாஜகவுடன் இனி ஒருகாலத்திலும் அதிமுக கூட்டணி வைக்காது என்பதை மக்களுக்கு புரியும் வகையில் அதிமுகவினர் எடுத்து சொல்ல வேண்டும். மக்களுக்கு இந்த விஷயத்தில் நம் மீது எந்த சந்தேகமும் வரக் கூடாது" என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு தான் தற்போது பாஜக தலையில் இடியை இறக்கியுள்ளது.