#BIG NEWS : நாளை முதல் 234 தொகுதிகளிலும் தளபதி விஜய் பயிலகம் தொடக்கம்..!
தளபதி மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்படுகின்றன. சமீபத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒவ்வொரு தொகுதியிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகள் என 234 தொகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத் தொகை வழங்கினார் விஜய்.
அப்போது பேசிய நடிகர் விஜய், நாளை வாக்காளர்களான இன்றைய மாணவ மாணவிகள், தங்களின் பெற்றோர் ஓட்டுக்கு பணம் வாங்குவதை தடுக்க வேண்டும் என்றார். மேலும் அம்பேத்கர், பெரியார், காமராஜன் ஆகிய தலைவர்கள் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் இரவு நேர பாடசாலை திட்டம் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வரும் ஜூலை 15 ஆம் தேதி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட முடிவு செய்து இந்த திட்டத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இரவு நேர பாட சாலைக்கான ஆசிரியர் பணிக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் குறைந்தபட்ட கல்வி தகுதியாக இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்கம் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தற்போது மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”தளபதி" யின் சொல்லுக்கிணங்க ஜூலை 15 ம் தேதி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் தமிழகத்தில் உள்ள காமராஜர் சிலைகளுக்கு மலர் மாலை சூட்டி மரியாதை செய்ய வேண்டும்.அத்துடன் அந்நாளில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை தங்களால் இயன்ற அளவில் செய்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். அதே போல் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை போற்றும் வகையில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் "தளபதி விஜய் பயிலகம்" ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.