1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய 'தஞ்சை' தமிழன்!

1

கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன் கோலோச்சு சர்வதேச செஸ் போட்டியில் வீழ்த்துவது என்றால் குதிரைக் கொம்புதான். அதுவும் கிளாசிக் செஸ் பிரிவில் கார்ல்சனின் பலத்தை அறிந்தவர்களுக்கு, இது நன்றாகவே தெரிந்திருக்கும். இப்படிப்பட்ட சூழலில் தான் கார்ல்சனை வீழ்த்தி, கத்தார் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் ஏழாவது சுற்றில் அசத்தல் வெற்றியை பதிவு செய்திருக்கிறார் தஞ்சையை சேர்ந்த 24 வயதான கிராண்ட் மாஸ்டர் முரளி கார்த்திகேயன்.

கிளாசிக் செஸ் பிரிவில் மேக்னஸ் கார்ல்சன் இதுவரை இரண்டு இந்தியர்களிடம் மட்டுமே தோல்வியை சந்தித்திருந்தார். விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் மட்டுமே கார்ல்சனை வீழ்த்திய இந்திய கிராண்ட் மாஸ்டர்கள். அதிலும் ஹரிகிருஷ்ணனிடம் கார்ல்சன் தோல்வியுற்றது 2005 ஆண்டு. அதாவது சுமார் 18 ஆண்டுகளுக்கு முன், அப்போது கார்ல்சனின் வயது 15. இந்த சூழலில் தான் பலம் பொருந்திய கார்ல்சனை கிளாசிக் செஸ் பிரிவில் தனது நுட்பமான காய் நகர்த்தல் மூலம் வென்றிருக்கிறார் முரளி கார்த்திகேயன்.

ஏழாவது சுற்றின் ஆரம்பத்தில் கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய கார்த்திகேயன், கார்ல்சனின் வியூகங்களை உணர்ந்து பதில் வியூகம் அமைக்க கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் கார்ல்சன் செய்த தவறை தனக்கு சாதகமாக்கிக் கொண்டார். தொடர்ந்து நிதானமாக விளையாடி முரளி கார்த்திகேயன், தனது சாதுர்யத்தால், 45-வது நகர்த்தலின் முடிவில் கார்ல்சனை வென்றார்.

மகத்தான வெற்றிக்குப் பின் ஆட்டத்தின் போக்கு பற்றி பேசிய கிராண்ட் மாஸ்டர் முரளி கார்த்திகேயன், தனக்கு நேரம் குறைவாக இருந்ததை அறிந்து, அதீத அழுத்தம் கொடுக்க கார்ல்சன் முயற்சித்ததாக கூறினார். ஆனால், அந்த வியூகம் அவருகே பாதகமாக அமைந்து விட்டதாக தெரிவித்தார்.

சர்வதேச செஸ் போட்டிகளை பொறுத்தவரை இந்தியாவின் கேந்திரமாகவே தமிழ்நாடு விளங்கி வருகிறது. அண்மைக் காலங்களில் பிரக்ஞானந்தா, குகேஷ் உள்ளிட்ட இளம் வீரர்கள் கார்ல்சனுக்கு நெருக்கடி அளித்து வரும் நிலையில், சத்தமின்றி கிளாசிக் செஸ் பிரிவில் புதிய வரலாறு படைத்திருக்கிறார் முரளி கார்த்திகேயன்.

கார்ல்சனை வீழ்த்த முரளி கார்த்திகேயன் பின்பற்றிய வியூகங்கள் மிகவும் சவால் ஆனவை என்று, பிரபல செஸ் பயிற்சியாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுவே, முரளி கார்திகேயனின் செஸ் நுட்பத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
 

Trending News

Latest News

You May Like