#BIG NEWS: இனி பள்ளிகளில் ஆசிரியர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டால்... தண்டனை + கல்விச்சான்று ரத்து செய்யப்படும் - அமைச்சர் அம்பில் மகேஷ்..!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்த செய்திகள், நடவடிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 3 ஆசிரியர்கள் சேர்ந்து 13 வயது மாணவியை வன்கொடுமை செய்த சம்பவம், மணப்பாறையில் ஆசிரியர் மாணவியை வன்கொடுமை செய்த சம்பவம் ஆகியவை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியர்களே மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்டால் என்ன செய்வது என பலரும் பேசி வருகின்றனர்.
செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், "ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் மாணவர் மனசு என்னும் பெட்டி வைத்துள்ளோம். இருந்தாலும் மாணவர்களுக்கு ஏற்படும் பய உணர்வு காரணமாக அவர்களுக்கு நடக்கும் சில சம்பவங்களை வெளியில் சொல்லாமல் இருக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களும் மாணவிகளுக்கும் கவுன்சிலிங் கொடுக்கும் வகையில் 800 மருத்துவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
அப்படி இருந்தும் அரசுப் பள்ளியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தின் உண்மை தன்மையை விசாரணை செய்து, அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். அதையும் தாண்டி அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். இரும்பு கரம் கொண்டு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இனி பள்ளிகளில் யார் தவறு செய்தாலும் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து யார் தவறு செய்தாலும் அவர்களின் கல்வி தகுதி ரத்து செய்யப்படும். இனி அது போன்று நடக்காத வண்ணம் மாணவிகளுக்கு ஏற்படும் இடையூறுகளை எந்த ஒரு பயமும் இல்லாமல் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க தொடர்ந்து அவர்களுக்கான புதிய திட்டங்கள் கொண்டுவரப்படுகிறது.
இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில் தொடக்கப் பள்ளியிலும் ஸ்மார்ட் போர்டு திட்டம் கொண்டு வந்துள்ளோம். அதிநவீன ஆய்வுக்கூடங்கள் 8,000 க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிக்கு கொண்டு வந்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.