#BIG NEWS : பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து..!
காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய விவகாரத்தில் டி.டி.எஃப் வாசன் கைதாகி புழல் சிறையில் உள்ளார். ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனையடுத்து, தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, வாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் டிடிஎஃப் வாசனின் யூடியூபை மூடிவிட்டு, அவரது விலையுயர்ந்த பைக்கை எரித்து விடலாம் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டி.டி.எஃப் வாசன் மீது பல்வேறு பகுதிகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ. உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 2033ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிவேகமாக வாகனங்களை ஓட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதால் ஓட்டுநர் ஒரிமம் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார். இந்த ரத்து 06.10.2023 முதல் 05.10.2033 வரை அமலில் இருக்கும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.