1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : கேரளா கர்நாடகா தொடர்ந்து வக்ஃபு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தீர்மானம்..!

1

கேரளா, கர்நாடகா அரசுகளைத் தொடர்ந்து, வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளது.

நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய சொத்துகளை பதிவு செய்து வெளிப்படைத்தன்மையுடன் நிர்வகிக்க வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இது சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதால், பாஜக எம்.பி ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக் குழு ஆய்வுக்கு இந்த சட்ட திருத்த மசோதா அனுப்பப்பட்டது.

இதில் அனைத்து தரப்பினரின் கருத்துகளும் ஆலோசிக்கப்பட்டன. என்.டி.ஏ கூட்டணி கட்சி உறுப்பினர்கள் தெரிவித்த 14 திருத்தங்களுக்கு கூட்டுக்குழு ஒப்புதல் அளித்தது. அதன்பின் 655 பக்க அறிக்கை தயார் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும்பான்மை ஓட்டு அடிப்படையில் அந்த அறிக்கையை கூட்டுக் குழு ஏற்றுக்கொண்டது.

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தொடர்பான கூட்டுக் குழுவின் அறிக்கையை அதன் உறுப்பினரான பாஜக எம்.பி மேதா விஷ்ராம் குல்கர்னி மாநிலங்களவையில் கடந்த மாதம் 13 ஆம் தேதி தாக்கல் செய்தார்.

அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "கூட்டுக்குழு அறிக்கையில், பல உறுப்பினர்கள் தெரிவித்த அதிருப்தி கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மை உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளை மட்டும் அறிக்கையில் குறிப்பிடுவது சரியல்ல. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இது போலி அறிக்கை. இந்த அறிக்கையை திரும்ப பெற்று, மீண்டும் கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்" எனத் தெரிவித்தார்.

மேலும் இந்த மசோதா தொடர்பான தங்களது அதிருப்தி கருத்துக்கள் நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் குற்றம் சாட்டினர். இந்த குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு திட்டவட்டமாக மறுத்தார். "கூட்டுக் குழு அறிக்கையில் இருந்து எந்த கருத்தும் நீக்கப்படவில்லை. அனைத்து குறிப்புகளும் கூட்டுக் குழு அறிக்கையின் இணைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. எதுவும் நீக்கப்படவில்லை." எனத் தெரிவித்தார். இதேபோல் கூட்டுக்குழுவின் அறிக்கை மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது. வக்பு வாரியத்தில், முஸ்லிம் அல்லாத நபர்களை 4 பேர் வரை சேர்க்க கூட்டுக்குழு அறிக்கையில் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரச்சனைகளை விசாரிக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து மாநில அரசால் நியமிக்கப்படும் மூத்த அதிகாரிக்கு மாற்றவும் கூட்டுக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து, இந்த மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது. மக்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற 272 ஓட்டுக்கள் தேவை. மக்களவையில் மொத்தம் உள்ள 543 உறுப்பினர்களில் தே.ஜ கூட்டணிக்கு 293 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. அதனால் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்படும். அதேபோல் மாநிலங்களவையிலும் வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற பாஜக அரசு முயற்சிகளை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.

மத்திய அரசால் முன்மொழியப்பட்ட வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வருகிறது தமிழ்நாடு அரசு. வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிடக் கோரும் தீர்மானத்தை இன்று முன்மொழிகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

வக்பு சட்டத் திருத்த மசோ 2024-ஐ எதிர்த்து, கேரளா மாநில அரசு கடந்த ஆண்டு அக்டோபரில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. கர்நாடகா அரசு இந்த மாதம் வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு அரசும், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து சட்டமன்றத்தில் ஒரு தனித் தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளது.

Trending News

Latest News

You May Like