#BIG NEWS : முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை..!
2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங் களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணிக்கச் சென்றிருந்த சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ், பெண் எஸ்.பி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் புகார் எழுந்தது.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. அதன்பின்னர் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக, ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பூர்ணிமா இவ்வழக்கில் தீர்ப்பு இறுதி தீர்ப்பு வருகின்ற 12.02.2024 ஆம் தேதி வழங்கப்படுமென கூறி 12 ஆம் தேதி வழக்கினை ஒத்திவைத்தார்.
அதன்படி, பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சில நிமிடங்களுக்கு முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது 3 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துவதாக நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டு கீழமை நீதிமன்றமான தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்வதாக தீர்ப்பளித்தார்.
மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக 90 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படுவதாகவும், அதுவரை முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிற்கு ஜாமின் வழங்குவதாகவும் நீதிபதி பூர்ணிமா தெரிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்