#BIG NEWS : தர்ப்பூசணியில் கை வைத்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி பணியிட மாற்றம்..!

சென்னை கோயம்பேடு பழ சந்தையில் உணவுத்துறை அதிகாரி சதீஷ் குமார் அண்மையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தர்பூசணி பழங்கள் ஊசி செலுத்தி சிவப்பு நிறத்தில் விற்கப்படுவதாகவும், அதனை சாப்பிடுவதால் மக்களுக்கு ஆபத்து எனவும் வீடியோ வெளியிட்டிருந்தார்.
அவரது இந்த செயலை கண்டித்து கோயம்பேடு பழக்கடை வியாபாரிகள் பலர் திரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்பூசணி பழங்களை போட்டு உடைத்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
ஆர்ப்பாட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், உணவுத்துறை அதிகாரி சதீஷ் குமாரை கண்டித்து கோயம்பேடு பழ வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தெரிவித்தார். தர்பூசணியில் ஊசி செலுத்தப்படுவதாக சதீஷ்குமார் வதந்தி பரப்புகிறார் என்று குற்றச்சாட்டினை முன்வைத்தார். மேலும், ஒரு டன் தர்பூசணி பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையான நிலையில் உணவுத்துறை அதிகாரி சதீஷ் குமார் பரப்பிய அவதூறால் தற்போது 2,000 ரூபாய்க்கு விற்பனை ஆவதாக அவர் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
அத்துடன், உணவுத்துறை அதிகாரி சதீ ஷ்குமார் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு சிறு குறு வியாபாரிகளை நசுக்குவதாக குறிப்பிட்டார். மேலும், அப்பா என்று சொல்லிக் கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறு குறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தார். மேலும், உணவுத்துறை அதிகாரி சதீஷ் குமாரை உடனடியாக பதவியில் இருந்து மாற்ற வேண்டும், இல்லையென்றால் தங்கள் போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை உணவு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த சதிஷ் குமார், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி போஸ், சென்னை மாவட்டத்தையும் கூடுதலாக கவனிப்பார் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.