#BIG NEWS : திருபுவனத்தில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த இளைஞரின் தம்பிக்கு அரசுப்பணி..!

திருப்புவனம் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிவாரணங்களை அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட கலெக்டர் பொற்கொடி ஆகியோர் வழங்கினர். இதன்படி அஜித்குமாரின் தம்பி நவீன் குமாருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையும், குடும்பத்தினருக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கப்பட்டது.
முன்னதாக திருப்புவனம் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த கோவில் காவலாளி அஜித்குமார் வீட்டுக்கு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரும், சிவகங்கை மாவட்ட தி.மு.க.செயலாளருமான பெரியகருப்பன் நேற்று சென்றார். அங்கு அஜித்குமாரின் தாயார் மாலதி மற்றும் சகோதரர் நவீன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது அவர் தனது செல்போன் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு அஜித்குமாரின் தாயார் மற்றும் தம்பி இருக்கிறார்கள் என்று கூறினார். பின்னர் தனது செல்போனை அஜித்குமார் தாயாரிடம் கொடுத்து முதல்-அமைச்சர் பேசுகிறார் என்று கூறி கொடுத்தார்.
அவரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 'வணக்கம்மா, ரொம்ப சாரிம்மா. (3 முறை கேட்டார்). தைரியமா இருங்கள். நான் தீவிரமான நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கிறேன். உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ? அதை செய்து தர சொல்கிறேன். அமைச்சர் பார்த்துக்கொள்வார். தைரியமாக இருங்கள்... தைரியமாக இருங்கள்...நடக்க கூடாதது நடந்து விட்டது' என்று கூறி ஆறுதல் கூறினார்.
பின்னர், அஜித்குமாரின் சகோதரர் நவீனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அவர் பேசும்போது, 'வணக்கம் தம்பி. நடக்க கூடாதது நடந்துவிட்டது. தைரியமாக இருங்கள். நான் நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கிறேன். உங்களுக்கு என்ன உதவி வேண்டுமோ, அதை மாவட்ட அமைச்சர் மூலம் செய்ய சொல்கிறேன். தைரியமாக இருங்கள். நடந்த சம்பவத்துக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம். தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். அனைவரையும் கைது செய்துவிட்டோம். தைரியமாக இருங்கள். உங்களுக்கு என்ன பண்ண வேண்டுமோ, அதை செய்து தர சொல்கிறேன்.
இதை யாராலும் (இந்த சம்பவம்) கேட்டுக்கொண்டு விட்டுவிட முடியாது. அவர்களுக்கு என்ன தண்டனை வாங்கி கொடுக்க முடியுமோ, வாங்கி கொடுத்து விடுவோம். என்றார்.
அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், 'விசாரணைக்கு கூட்டிட்டு போயிட்டு இந்த மாதிரியெல்லாம்.... 29 வயது பையன் சார். எங்க அப்பா சின்ன வயதிலேயே இறந்து விட்டார். ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்த பிள்ளை சார் அவன்' என்று கண்கலங்கியபடி நவீன் கூறினார்.
இந்த செல்போன் உரையாடலின்போது, நவீனிடம் நீங்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டார். அதற்கு அவர், நான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன்' என்று கூறினார்.
அஜித்குமாரின் தாயார் மற்றும் சகோதரருக்கு ஆறுதல் கூறும் செல்போன் உரையாடலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டார். அத்துடன் அவர், திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்க கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு.
கடமை தவறி குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத்தரும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்' என்று கருத்து பதிவிட்டிருந்தார்.