#BIG NEWS : தக்காளியால் 30 லட்சம் சம்பாதித்த ஆந்திர விவசாயி கை, கால்கள் கட்டப்பட்டு கொலை..!
இந்தியா முழுவதும் பல இடங்களில் கன மழை, வெள்ளம் என நாடே சொல்லமுடியாத பெரும் துயரை அனுபவித்து வருகிறது. பலத்த மழை காரணமாக விவசாயப்பொருள்களின் விலை விண்ணைத்தொட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் உள்ளது தக்காளிதான்..தக்காளி கிலோ 1 ரூபாய், 2 ரூபாய் என்றெல்லாம் வாங்கி சமைத்து தள்ளியவர்கள் நம் மக்கள். அவர்களுக்கு கிலோ 160 ரூபாய், 180 ரூபாய் விற்றால் நிலைமை என்னவாகும். ஒரு பகுதி மக்கள் வெள்ளம் மழையால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டால் மற்றொரு புறம் உள்ள மக்கள் காய்கறி விலை உயர்வால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்தியா முழுவதிலுமே நிலைமை இப்படி இருக்க, ஆந்திரா மாநிலம், அன்னமய்யா மாவட்டத்தில் மதனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் ரெட்டி. விவசாயி ஆன இவர், தனது தோட்டத்தில் தக்காளி பயிரிட்டு அறுவடை செய்துள்ளார். தற்போது நிலவும் தக்காளியின் விலை உயர்வால் 20 நாட்களில் 30 லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்டியுள்ளார். இவர் தனது தோட்டத்திலேயே தங்கியிருந்து தக்காளியை பாதுகாத்து வந்துள்ளார். இந்தநிலையில், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ராஜசேகர் ரெட்டி தனது தோட்டத்தில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜசேகர் ரெட்டியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது, தக்காளி விற்பனை மூலம் ராஜசேகர் ரெட்டி சம்பாதித்து வைத்திருந்த பணத்தை கொள்ளை அடிக்கவே அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் கொலையாளிகள் இருசக்கர வாகனத்தில் வந்திருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.