#BIG NEWS : பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறாரா ஓபிஎஸ்..?
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 4 வழக்குகளும் பொறுப்பு தலைமை நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜபாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ஆஜராகி வாதிட்டார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. யாரும் போட்டியிட முடியாத வகையில் பொதுச்செயலாளர் பதவிக்கு நிபந்தனை கொண்டு வரப்பட்டுள்ளது. ஓபிஎஸ் முதலமைச்சராக, நிதியமைச்சகராக பதவி வகித்துள்ளார்; 1977 முதல் கட்சியில் இருக்கிறார். ஓபிஎஸ் பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். எந்த வாய்ப்பும் அளிக்காமல் காரணத்தையும் கூறாமல் கட்சியிலிருந்து ஓபிஎஸ்ஐ நீக்கியது நியாயமற்றது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கே தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இரட்டை தலைமை முடிவு தன்னிச்சையானது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும் என்ற விதியை பொதுக்குழு உறுப்பினர்களால் திருத்த முடியாது. பெரும்பான்மை இருப்பதால் எந்த முடிவையும் எடுப்போம் என்ற தோணியில் எடப்பாடி பழனிசாமி தரப்பு செயல்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக கூறும் எதிர் தரப்பினர், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களை மட்டும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என தொண்டர்கள் விரும்புவதாக கூற எந்த புள்ளிவிவரமும் ஆவணமும் இல்லை. அனைத்தும் காகித வடிவிலே உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் நிபந்தனைகளை நீக்கினால் போட்டியிட தயார்: வழக்கையும் வாபஸ் பெறத் தயாராக உள்ளோம்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான நிபந்தனைகள் நீக்கப்பட்டால் ஓபிஎஸ் உட்பட மேலும் பலர் போட்டியிட வாய்ப்பு உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் வாதத்தால் அதிமுக விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை ஏற்று அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகள் நீக்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம் நிறைவடைந்த பின்னர் பழனிசாமி தரப்பு வாதங்களை முன்வைக்க உள்ளது.