#BIG NEWS : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முக்கிய அறிவிப்புகள் ஒர் பார்வை..!
கர்நாடகாவில் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 13 ஆம் தேதி எண்ணப்படுகிறது.நாளுக்கு நாள் அனல் பறக்கும் பரப்புரையால், தலைவர்கள் வருகை மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் என கர்நாடக தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அத்துடன் அரசியல் கட்சிகள் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதவகையில் பாஜக நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்கள், இலவச பால், ரேஷன் கடைகளில் 5 கிலோ சிறுதானியங்கள் வழங்கப்படும் என அசத்தலான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சித்தராமையா, மாநில தலைவர் டிகே சிவக்குமார், தேர்தல் அறிக்கை குழு தலைவர் டாக்டர் பரமேஸ்வராஜி ஆகியோர் வெளியிட்டனர். பாஜகவுக்கு போட்டியாக ஏராளமான இலவச அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் :
*க்ருஹ லக்ஷ்மி திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும்.
* யுவா நிதி திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு குறைந்தது இரண்டாண்டுகள் வரை மாதம் ரூ.3000 வழங்கப்படும். வேலையில்லா டிப்ளமோ பயின்றவர்களுக்கு ரூ.1500 வழங்கப்படும்.
* க்ருஹ ஜோதி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.
* பஜ்ரங் தல், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா போன்ற மதம், சாதி சார்ந்து வெறுப்பை விதைக்க முயலும் அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படும்.
* பொதுப்பணித் துறையில் வெளிப்படையான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படும்.
* பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பாசனத்திட்டம், நகர்ப்புற வளர்ச்சி, மின் துறை அரசு ஒப்பந்தங்களில் முறைகேடு லஞ்சம் கண்டறியப்பட்டால் அவற்றைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்றப்படும்.
* மாநிலத்தின் அனைத்து நீதிமன்றக் கட்டிடங்கள், வளாகங்களை நவீனப்படுத்த ரூ.2000 கோடி நிதி ஒதுக்கப்படும்.
* அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் வை ஃபை ஹாட்ஸ்பாட்கள் அமைக்கப்படும்.
* மகாத்மா காந்தி கிராம் ஸ்வராஜ் திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கி 5 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் சுத்தமான குடிநீர், சுகாதாரமான சுற்றுச்சூழல், அடிப்படை கல்வி, சுகாதாரம், அனைத்து பருவநிலைகளுக்கும் உகந்த சாலைகள் அமைக்கப்படும்.
* அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, கேழ்வரகு, கம்பு, சிறுதானியங்களில் எதை தேர்வு செய்கிறார்களோ அது 10 கிலோ வழங்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பல்வேறு அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. தேர்தல் வாக்குறுதிகள் காங்கிரஸ் ஆட்சி அமையும் முதல் நாளிலேயே முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே அமல்படுத்தப்படும் என்று மல்லிகார்ஜுன கார்கே உறுதியளித்தார்.