#BIG BREAKING :எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் மசோதாக்களை எப்படி நிலுவையில் வைத்திருக்க முடியும்?
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி வருவதாக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆளுநர் ரவி மீது குற்றம்சாட்டி குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலையில் கடிதம் எழுதினார். ‘சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தாமதம் ஏற்படுத்துகிறார். எனவே, பதவியில் இருந்து நீக்கப்பட தகுதியானவர்’ என்று அதில் முதல்வர் தெரிவித்திருந்தார்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தாமதம் செய்வதாக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 10-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, ‘மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம், முடிவை நிறுத்தி வைக்கலாம், திருத்தம் கோரி அரசுக்கு திருப்பி அனுப்பலாம் அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பலாம். எதுவுமே செய்யாமல் கிடப்பில் போட முடியாது’ என தெரிவித்து, விசாரணையை நவ.20-க்கு (இன்று) தள்ளிவைத்தது.
இந்த நிலையில், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஆளுநர் ரவி எந்த வித விளக்கத்தையும் கூறாமல் மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநரின் செயல்பாட்டால் 8 கோடி தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஒவ்வொரு மசோதாவிற்காகவும் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாட முடியாது” என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது பேசிய நீதிபதிகள், “3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்? எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் மசோதாக்களை எப்படி நிலுவையில் வைத்திருக்க முடியும்? என சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். 2020ம் ஆண்டு ஜனவரியில் இருந்து மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. உச்சநீதிமன்றம் கடந்த 10ம் தேதி ஆணை பிறப்பித்தது. 13ம் தேதி மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்தின் 200வது பிரிவின் படி, மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதாக கூற முடியாது. சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால், அது நிதி மசோதாவிற்கு நிகரானதாக மாறிவிடும்” என கூறினார்.