#BIG BREAKING : சென்னையில் இடி மின்னலுடன் கனமழை..! கொஞ்ச நேரத்தில் 100 மில்லி மீட்டர்..!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. எனினும், ஒருசில பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு அனல் காற்று வீசியது. உஷ்ணத்தின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் மக்கள் தவித்தனர். தமிழகத்தில் நேற்று 8 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது.
இந்நிலையில் சென்னையில் நேற்றிரவு எதிர்பாராத விதமாக பலத்த மழை கொட்டியது. நள்ளிரவு தொடங்கி இன்று காலை வரை விடிய, விடிய இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.
நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், அடையாறு, திநகர், சைதாப்பேட்டை, திருவான்மியூர், கிண்டி, ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.
ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
இதனால் வெப்பம் தணிந்து சென்னை நகரம் குளிர்ச்சியாக மாறியது. அதேவேளையில் தென் மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது.
இந்நிலையில் சற்றுமுன் சென்னையில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி வருகிறது. கனமழை காரணமாக மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உள்பட சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலைகளில் செல்வதை தவிர்ப்பது நல்லது. இந்த மழை குறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், சென்னை முழுவதும் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தற்போது நகரின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்கனவே 20-30 மிமீ பெய்துள்ள நிலையில், நகரின் மேற்கு புறநகர் பகுதிகளில் ஏற்கனவே 60-70 மிமீ மழை பதிவாகியுள்ளது என்றும், கண்டிப்பாக 100 மில்லி மீட்டர் மழை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பதிவாக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தனர். அதேநேரம் சென்னையை தவிர தமிழ்நாட்டில் வேறு எங்குமே மழை பெய்யவில்லை.
வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், தியாகராயர் நகர், மேற்கு மாம்பலம், வடபழனி, கோயம்பேடு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், சேலையூர், செம்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.