1. Home
  2. தமிழ்நாடு

#BIG BREAKING : ராஜமுந்திரி மத்திய சிறைக்கு செல்கிறார் சந்திரபாபு நாயுடு ..!

1

கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரியாக இருந்தார். இவரது பதவி காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.550 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக மாநில குற்ற புலனாய்வு துறை (சி.ஐ.டி) கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே ஆளும் கட்சிக்கு எதிராக மக்களை அணிதிரட்டும் வகையில் பஸ்சில் ஊர் ஊராக யாத்திரை சென்று பொதுக்கூட்டங்களை நடத்தி வரும் சந்திரபாபு நாயுடு, நேற்று முன்தினம் இரவு நந்தியாலா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அதன் பின்னர் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அருகே பஸ்சை நிறுத்தி, அதிலேயே உறங்க சென்றார். அப்போது அங்கு வந்த நந்தியாலா போலீசார் நேற்று அதிகாலை 6 மணயளவில் சந்திரபாபு நாயுடுவை அதிரடியாக கைது செய்தனர்.

சந்திரபாபு நாயுடுவை கைது செய்ததற்கு எதிராக அவருடைய கட்சித் தொண்டர்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நெல்லூர் மற்றும் கிழக்கு கோதாவரி ஆகிய 2 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். மேலும் அவர் சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த விஜயவாடா லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் சந்திரபாபு நாயுடுவின் ஜாமின் மனுவை நிராகரித்ததோடு அவருக்கு 14 நாட்களுக்கு நீதிமன்ற காவல் வழங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தில் இந்த உத்தரவு மூலம் ஆந்திர மாநிலம் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
 

Trending News

Latest News

You May Like