கரையோர மக்களுக்கு எச்சரிக்கை : பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பில்லூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, நேற்று நள்ளிரவு 12 மணிக்கு அணையின் நான்கு ஷட்டர்களும் திறக்கப்பட்டன.
அப்போது, வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது காலை 10.20 மணி அளவில் நீர் அளவு குறைந்து 15 ஆயிரம் கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது. பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு நேற்று இரவில் இருந்தே போலீசார், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை வழங்கி வருகின்றனர்.
சிறுமுகை, மேட்டுப்பாளையம், பில்லூர் அணை என 3 இடங்களில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். வெள்ள பாதிப்பை அடுத்து 17 வீடுகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பவானி, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்