பவானி ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்..!
கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3,000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பேர் அளித்த புகாரின்பேரில் பிரஜ்வல் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜெர்மனிக்கு தப்பியோடிய அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தியதாக பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா, தாயார் பவானி உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கில் ரேவண்ணா கைது செய்யப்பட்ட நிலையில், பவானி தலைமறைவானார். மேலும் ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது பவானி தரப்பில் உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீன் கோரப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி கிருஷ்ணா தீட்ஷித், வழக்கில் தொடர்புடைய சாட்சிகளை கலைப்பது, ஆதாரங்களை அழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. போலீஸாரின் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையடுத்து பவானி ரேவண்ணா நேற்று பெங்களூருவில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவரிடம் பாலியல் வன்கொடுமை வழக்கு, பாதிக்கப்பட்ட பெண்கள், வீட்டு பணிப்பெண், மகனின் காணாமல் போன செல்போன் போன்றவை குறித்து விசாரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.