1. Home
  2. தமிழ்நாடு

பவதாரிணி திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு - முதல்வர் ஸ்டாலின்..!

1

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரபல பின்னணிப் பாடகியும் இசைஞானியின் அன்பு மகளுமான பவதாரிணியின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.இசைமேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரிணி , தேனினும் இனிய தனது குரல்வளத்தால் இளம் வயதிலேயே ரசிகர்களின் நெஞ்சில் தனியிடம் பிடித்தவர் ஆவார். கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் அவருடையது. 'பாரதி' திரைப்படத்தில் தனது தந்தையின் இசையமைப்பில் பாடிய 'மயில் போல பொண்ணு ஒண்ணு' பாடலுக்காக இளம் வயதிலேயே தேசிய விருதும் பெற்றவர். இசையமைப்பாளராகவும் பல படங்களில் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகில் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்க வேண்டிய பவதாரிணியின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு. அவர் விட்டுச் செல்லும் இடம் அப்படியே இருக்கும். தனது பாசமகளை இழந்து துடிக்கும் இசைஞானிக்கும், பவதாரணியின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.

முன்னதாக, இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரிணி உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 47. மறைந்த பவதாரிணிக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், திரை உலகினர், இசைத்துறையினர் புகழஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ பாடலுக்காக பவதாரிணிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 1984-ல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘திதிதே தாளம்’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். தொடர்ந்து, ‘ராசய்யா’, ‘அலெக்சாண்டர்’, ‘தேடினேன் வந்தது’, ‘காதலுக்கு மரியாதை’, ‘அழகி’, ‘பிரண்ட்ஸ்’, ‘தாமிரபரணி’, ‘உளியின் ஓசை’, ‘கோவா’, ‘மங்காத்தா’, ‘அனேகன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடியுள்ளார்.

தவிர, கடந்த 2002-ம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் வெளியான ‘மித்ர் மை பிரண்ட்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். தொடர்ந்து, ‘பிர் மிலேங்கே’ (இந்தி), ‘அமிர்தம்’, ‘இலக்கணம்’, ‘மாயநதி’ படங்களுக்கு இசையமைத்துள்ளார். பவதாரணி கடந்த 5 மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்ற அவர், அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், வியாழக்கிழமை மாலை 5.20 மணி அளவில் இலங்கையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது உடல் வெள்ளிக்கிழமை மாலை சென்னை கொண்டுவரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


 

Trending News

Latest News

You May Like